Skip to main content

பெண் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு; காவலர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை

Published on 07/05/2024 | Edited on 07/05/2024

 

NN

புதுக்கோட்டை சமீப காலமாக கஞ்சா கோட்டையாக மாறி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து இந்தக் கஞ்சா கும்பல் களமிறங்கி விற்பனை செய்து வருகிறது. சிறுவர்களையும், இளைஞர்களையும் முதலில் கஞ்சா போதைக்கு அடிமையாக்கி பிறகு அவர்களையே சில்லரை விற்பனைக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இது மாவட்டம் முழுவதும் புற்றுநோய் போல பரவிவிட்டது.

இதே போலப் புதுக்கோட்டை நகரில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத, வெளிநாடுகளில் வசிப்பவர்களின் வீடுகளை வாடகைக்கு எடுக்கும் பெண் கஞ்சா வியாபாரிகள் ஆந்திராவில் இருந்து டன் கணக்கில் மொத்தமாக கஞ்சா பண்டல்களை இறக்கி பதுக்கி வைத்து புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி மாவட்ட வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதுடன் கிழக்கு கடற்கரை வழியாக கடல் மார்க்கமாக இலங்கைக்கும் அடிக்கடி கடத்தல் செய்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தக் கும்பலைப் பிடித்த போது சிலர் தப்பிச் சென்றனர். இவர்களிடம் போலிசார் நடத்திய விசாரனையில் சில போலிசாரே எங்களுடன் தொடர்பில் உள்ளனர். போலிசார் வருகின்ற தகவலை அவர்களே எங்களிடம் சொல்லி விடுவார்கள் என்று சில அதிர்ச்சி தகவலைக் கூறியுள்ளனர். அதன் பிறகு தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான சில போலிசாரின செல்போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டதில் புதுக்கோட்டை மதுவிலக்கு பிரிவு காவலர் கந்தவேல் மற்றும் அறந்தாங்கி காவல் நிலைய தலைமை காவலர் முத்துக்குமார் ஆகியோர் கஞ்சா விற்பனை செய்யும் பெண்களுடன் தொடர்பில் இருந்தது உறுதியானது. இதில் முத்துக்குமார் ஏற்கெனவே இதே கும்பலுடன் தொடர்பில் இருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டு சமீபத்தில்தான் மீண்டும் பணிக்கு வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, இரு தலைமைக் காவலர்களையும பணியிடை நீக்கம் செய்துள்ளார். கஞ்சா விற்பனை செய்த பெண்களுடன் போலிசார் தொடர்பில் இருந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்