
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப் பட்டு வரும் நிலையில் அதற்காக அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பல தரப்பு மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில், “மழலை மாறாத சிரிப்புடன் - கற்பிதங்கள் இல்லா உள்ளத்துடன் உலகையும் - சக மனிதர்களையும் எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக நம்மை வடிவமைத்துக் கொள்வது ஒவ்வொரு பொறுப்புள்ள மனிதரின் கடமை!
நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்றாமல், அவர்களது கனவுகள் ஈடேறத் துணை நிற்போம்! வளமான - நலமான - பசுமையான உலகில் குழந்தைகளை வளர்ப்போம் என்ற உறுதியை குழந்தைகள் தின வாழ்த்தாகத் தெரிவிப்போம். நமது உலகையும் - வாழ்வையும் ஒளிபெறச் செய்யும் குழந்தைகளுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்” என பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் மற்றும் த.வெ.க. தலைவர் விஜய், “ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. அவர்களின் புன்னகை. விலைமதிப்பற்றது. குழந்தைகளின் மனது, பொறாமை, பழிவாங்குதல், ஏமாற்றுதல் போன்ற எந்த ஒரு தீய எண்ணத்தையும் கொண்டிராமல், தெளிந்த நீரைப் போல் பரிசுத்தமானது. நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட இந்தக் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்! குழந்தைகளை எந்நாளும் பாதுகாத்துப் போற்றி மகிழ்வோம்! இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.