
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலில் இன்று காலை 10 மணிக்கு வெள்ளாள பாளையத்தைச் சேர்ந்த இரண்டு பேர் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அருகே, ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல் ஏற்கனவே குளித்துக் கொண்டிருந்தது. அவர்கள் வெளியூர் என்பதும் ஏதோ விவகாரமாகப் பேசிக் கொன்டிருப்பதையும் கண்டு சந்தேகப்பட்ட வெள்ளாள பாளையத்தைச் சேர்ந்த அந்த இருவரும் செல்ஃபோனில் ரகசியமாக கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
போலீசார் சில நிமிடங்களில் அந்த இடத்துக்கு வந்து அவர்களைச் சுற்றி வளைத்து விசாரித்தபோதுதான் அந்த அதிர்ச்சி தகவல் தெரிந்தது. சென்னையில் இருந்து பட்டா கத்தி வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கோபிசெட்டிபாளையம் வந்து கொள்ளையடிக்க ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.
சென்னை நங்கநல்லூர் கன்னித்தமிழ் தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சத்யா என்கிற சத்யநாராயணன், சென்னை மடிப்பாக்கம் கிருஷ்ணாநகரைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் ராமசந்திரன், நங்கநல்லூர் பி.வி.நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் சீதாராமன், பழைய பல்லாவரம் சுப்பிரமணியம் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சுரேஷ் என்கிற சுடலைராஜா, சென்னை மேடவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த சந்திரபோஸ் மகன் மணிகண்டன் ஆகிய 5 பேரை கோபிசெட்டிப்பாளையம் காவல்துறையினா் கைது செய்து அவா்களிடமிருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்துள்ளனா். மேலும் அவர்கள் கொள்ளையடிக்கத்தான் வந்தார்களா? அல்லது யாரையாவது கொலை செய்ய வந்த கூலிப்படையா எனவும் விசாரித்து வருகிறார்கள்.