கடலூர் மாவட்டம் செம்மண்டலத்தில் உள்ள ஒரு தனியார் பல்பொருள் அங்காடியில் காலாவதியான பொருட்களை விற்பனை செயவதாகவும், கரோனா தடுப்புக்கான கிருமிநாசினி தெளிக்காமலும், கடைமுன் கிருமிநாசினி வைக்காமலும் கடை நடத்தியதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறைக்குப் புகார்கள் சென்றது.
அதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகந்தன், வட்டாட்சியர் செல்வகுமார், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரசேகரன், கொளஞ்சி, சுந்தரமூர்த்தி, நகராட்சி உதவிப் பொறியாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் திடீரென சென்று அந்தப் பல்பொருள் அங்காடியை ஆய்வு செய்தனர். அப்போது அந்தக் கடையில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதில் 5 கிலோ ஊறுகாய், 25 லிட்டர் குளிர்பானம், 5 கிலோ பூண்டு, 5 கிலோ சாக்லெட், 10 லிட்டர் எண்ணெய் என 16 வகையான பொருட்கள் காலாவதியாகி இருந்தது தெரிய வந்தது.
மேலும் அந்தப் பல்பொருள் அங்காடியில் கரோனா தடுப்புக்கான எந்தச் சுகாதார நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் தெரிந்தது. அதையடுத்து அந்தக் கடை உரிமையாளருக்கு ரூபாய் 5,000 அபராதம் விதித்த அதிகாரிகள், காலாவதியான பொருட்களைப் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி ஒருவாரத்திற்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று எச்சரித்தனர்.
இதேபோல் சூரப்பநாயக்கன் சாவடி மெயின் ரோட்டில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் அழுகிய பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்குச் சென்ற அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அந்தப் பல்பொருள் அங்காடியில் அழுகிய வாழைப்பழம், மாம்பழம், கத்தரிக்காய், மாதுளை, தக்காளி, எலுமிச்சை போன்றவற்றை விற்பனை செய்தது தெரிய வந்தது. அதையடுத்து அந்த அங்காடி உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.