திண்டுக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக கர்நாடக மாநிலச் செயலாளரும், டிடிவியின் தீவிர ஆதரவாளருமான புகழேந்தி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ‘’நீதிமன்ற உத்தரவை மீறி பெங்களூர் சிறைச்சாலையில் சசிகலாவுக்கு ஏ கிளாஸ் வசதிகள் செய்து கொடுக்கின்றனர் என பழி சுமத்தியிருக்கிறார்.
டிஐஜி ரூபா சசிகலா பெயரை வைத்து அரசியல் செய்து வருகிறார். சிறைச்சாலையில் பால் கூட கிடைக்காமல் பல இன்னல்களை சசிகலா அனுபவித்து வருகிறார்.
தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லை மோடி ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் மோடி ஆட்சி செய்து வருகிறார்.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை புதிதாக கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி வழங்காத காரணத்தால் மத்திய அரசுக்கு எதிராக பேசி வருகிறார். பாஜக அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அரசு செயல்பட்டால் மூன்று மணி நேரம் கூட எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருக்க முடியாது. அவர் கொலைவழக்கில் உள்ளே சென்றுவிடுவார்.
கொடநாடு விவகாரத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கும் தொடர்பு உள்ளது. திராவிட ஆட்சியில் கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதுவரை முதல்வராக இருந்தது கிடையாது. ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருப்பது வேதனையாக இருக்கிறது. கொடநாடு விவகாரத்தில் நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றால் உடனடியாக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன். மாணிக்கவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் வெளியே வரும்.
எந்த நேரத்திலும் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தயாராக உள்ளது. ஆனால் திமுக தேர்தலை சந்திக்க பயப்படுகிறது. தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி அமைக்கும். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். கலைஞர் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தெளிவாக எடுப்பார். ஆனால் ஸ்டாலினுக்கு தெளிவான முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உள்ளது. பதவிக்காக இந்த இபிஎஸ் ஓபிஎஸ் கொலையும் செய்வார்கள்’’ என்று கூறினார். இந்த பேட்டியின் போது மாநகர செயலாளர் ராமுத்தேவர் உள்பட மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.