
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் நீதி வேண்டி பா.ஜ.க. சார்பில் நேற்று (25/01/2022) சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டடோர் என மொத்தம் 300- க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது பேசிய நயினார் நகேந்திரன் எம்.எல்.ஏ., "தமிழ்நாட்டில் அ.தி.மு.க. எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பா.ஜ.க. எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச அ.தி.மு.க.வில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை. அ.தி.மு.க. மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை" என்று கூறினார்.
நயினார் நாகேந்திரனின் பேச்சு அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் பதிலுக்கு தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று (26/01/2022) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. வின் மாநில தலைவர் அண்ணாமலை, "நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து பற்றி எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புக்கொண்டு வருத்தம் தெரிவித்தேன். நயினார் நாகேந்திரனின் கருத்து பா.ஜ.க.வின் நிலைப்பாடு இல்லை. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் எந்த சலனமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்" எனத் தெரிவித்தார்.