திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் லலிதா ஜூவல்லரி நகைக்கொள்ளை சம்பவம் கடந்த அக்டோபர் 2- ஆம் தேதி நடைபெற்றது. இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன் மற்றும் இவருடைய அக்கா மகன் சுரேஷ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது அனைவரும் திருச்சி சிறையில் இருக்கும் நிலையில், முருகன் மட்டும் பெங்களூர் சிறையில் இருக்கிறார்.
கொள்ளையன் முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகியதை அடுத்து பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் பெங்களூர் சிறையில் இருந்த முருகனை மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு திருச்சிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரணை செய்து, பின்பு மீண்டும் பெங்களூர் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் லலிதா ஜூவல்லரி கொள்ளைக்கு பிறகு போலீஸ் நடத்திய விசாரணையில் திருச்சியில் ஏற்கனவே நடந்த பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையிலும் முருகனுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கொள்ளையன் சுரேஷை போலீசார் இரண்டு முறை காவலில் எடுத்து விசாரித்தனர்.
இந்நிலையில் வங்கி கொள்ளை தொடர்பாக முருகனை விசாரிக்க சமயபுரம் போலீசார் முடிவு செய்து, பெங்களூர் மத்திய சிறையில் இருந்து அழைத்து வந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
பிறகு திருச்சி நீதிமன்றத்தில் முருகனை ஆஜர்ப்படுத்தி மீண்டும் சமயபுரம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே முதல் முறையாக நடந்த விசாரணையில் கொள்ளை நகைகளில் போலீசுக்கு லஞ்சம் கொடுத்தாக வாக்குமூலம் கொடுத்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சென்னையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ. ஆகியோரை சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடதக்கது.
தற்போது இரண்டாவது முறையாக முருகன் திருச்சி வந்துள்ளதும். போலீஸ் விசாரணையில் இன்னும் என்னவெல்லாம் சொல்லப்போகிறானோ என்று சம்மந்தப்பட்ட போலீசார் கிலியில் உள்ளனர்.