திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த ராணுவ வீரர் சிதம்பரம் (வயது 60). இவர் கடந்த 30 வருடங்களாக எலக்ட்ரானிக், மெக்கானிக்கல் இன்ஜியராக இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஜம்மு மற்றும் காஷ்மீரில் கார்கில் மற்றும் கல்வான் பள்ளத்தாக்குகளில் தன்னுடைய பங்களிப்பை நாட்டிற்காக தந்து ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு திரும்பும் அவருக்கு சிவகங்கை படை வீரர்கள் பாசறை, ஒருங்கிணைந்த தமிழக பட்டாளம், மணவை அக்னி சிறகுகள், சேயோன் இராணுவ பயிற்சி மையம் மற்றும் கல்வி அறக்கட்டளைகளை சேர்ந்த நிர்வாகிகள், திருச்சியை சேர்ந்த ராணுவ வீரர்கள் என 50க்கும் மேற்பட்டோர் இன்று திருச்சி இரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
போபாலில் இருந்து இரயில் மூலம் திருச்சிக்கு இன்று காலை வந்து சேர்ந்தார். அவருக்கு வரவேற்பு அளிக்க வந்த திருச்சியை சேர்ந்த ராணுவ வீரர்கள் கூறுகையில், "போபால் மற்றும் செகந்தராபாத் பகுதியில் உள்ள இராணுவ பயிற்சி பள்ளியில் மாஸ்டர் டெக்னிசியனாக பணியாற்றி பல டெக்சினிசியன் படை வீரர்களை உருவாக்கி உள்ளார். அவரால் தான் நாங்கள் பல இடங்களில் மிகத் திறமையாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சிதம்பரம், "நான் கடந்த 30 வருடங்களாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று திரும்பி உள்ளேன். நான் பல இடங்களில் பணியாற்றிவிட்டு வந்துள்ளேன். நாட்டிற்காக சேவை செய்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதேபோல் இளைஞர்களும் நாட்டுக்கு சேவை செய்ய முன்வர வேண்டும். அக்னிவீர், அக்னிபாத் போன்ற திட்டங்களின் மூலம் இளைஞர்கள் இராணுவத்திற்குள் வர வேண்டும். 4 ஆண்டுகள் பணிக்காலம் முடிந்தாலும் 25 சதவீதம் பேர் நிரந்தரமாக்கப்படுவார்கள். அதேபோல் பணிக்காலம் முடிந்து வெளியே வந்தாலும் நமக்கு வேலை கிடைக்கும். எனவே இளைஞர்கள் முன்வந்து நாட்டுக்கு உழைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.