தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரியின் கணவர் முருகன் சேர்மன் ஆக வேண்டும் என்ற ஆசையில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். தன்னுடைய சொந்தவூரான தத்தமங்களத்தை விட்டுவிட்டு பாலையூர் வார்டை தேர்ந்தெடுத்து போட்டியிட்டார்.
அந்த ஊராட்சியில் உள்ள உள்ளாட்சிப் பதவிகளை எல்லாம் ஏலம் விட்டு தனக்கு வேண்டியவர்களை வைத்து முருகன் ஏலம் எடுத்தார். இது குறித்து தேர்தல் அலுவலர்கள் சிறுகனூர் காவல்நிலையத்தில் புகார் செய்து 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் இந்த தேர்தல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏலம் எடுத்தாக சொல்லப்பட்ட இதே வார்டில் திமுக வேட்பாளர் ஸ்ரீதர் போட்டியிட்டார். இவருக்கு ஆதரவாக திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமையிலான திமுகவினர் கிராம மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தனர். இதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர் ஸ்ரீதர் அதிமுக எம்.எல்.ஏவின் கணவர் முருகனை 1307 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
ஏலம் விடப்பட்டு இவருக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று ஊர் கட்டுப்பாட்டையும் மீறி மக்கள் திமுக வேட்பாளர் ஸ்ரீதருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தது, பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 23 வார்டுகளில் 15 வார்டுகளை திமுக கைப்பற்றியது. இதனால் இந்த முறை சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது.
இந்த நிலையில் மாவட்ட செயலாளர் நேரு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ. பரமேஷ்வரி கணவர் முருகனை தோற்கடித்த ஸ்ரீதருக்கு சேர்மன் பதவி கொடுப்பது என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வரும் 11- ஆம் தேதி மண்ணச்சநல்லூர் ஒன்றிய சேர்மனாக திமுக சார்பில் பொறுப்பேற்கிறார் ஸ்ரீதர் என்பது குறிப்பிடதக்கது.