Skip to main content

"இந்த திட்டத்தை பொறுத்தவரை நான் மக்கள் பக்கம் நிற்பேன்": திருநாவுக்கரசர் எம்.பி.!

Published on 13/06/2021 | Edited on 13/06/2021

 

 

trichy congress party mp pressmeet hydrocarbon

புதுக்கோட்டை மாவட்டம், ஆதணக்கோட்டையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று  (13/06/2021) ஆய்வு செய்த திருச்சி தொகுதியின் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முகக்கவசத்தை வழங்கினார். 

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசரிடம், உங்கள் தொகுதியில் கருக்காகுறிச்சி வடதெருவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு ஒப்பந்தம் கோரி இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

 

இதற்கு பதிலளித்த அவர், "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இது போன்ற திட்டங்களை விவசாயிகள் காலம் காலமாக எதிர்த்து வருகின்றனர், அரசாங்கமும் எதிர்க்கிறது. அதனால் மக்களின் கருத்து இல்லாமல் எதையும் செய்யக்கூடாது. மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த திட்டத்தை பொறுத்தவரை நான் மக்கள் பக்கம் நிற்பேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அவர், தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது வழக்கமான நக்கல் கலந்த பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் தற்போது மன்சூர் அலிகான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.