அரசு மேனிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பொருளாதாரம் பாடத்திற்கு ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரிய வழக்கில் டி.ஆர்.பி. தலைவர், உயர்கல்வித்துறை செயலர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்புவதற்கு உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த மணிமாறன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில்,‘நான், எம்.பில்., எம்எட் (பொருளாதாரம்) முடித்துள்ளேன். அரசு மேனிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வாணையத்தால் கடந்த ஜூன் 12-ல் வெளியானது. செப். 27-ல் ஆன்லைன் தேர்வு நடந்தது. அக். 26-ல் முடிவுகள் வெளியானது. நான், 68 மதிப்பெண்கள்: பெற்றேன். ஆனால், 10 நாட்களுக்குப் பிறகு கீ ஆன்சர் வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவு அடிப்படையில் 211 காலியிடத்திற்கு 139 பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டனர். பல கேள்விகளுக்கு பல பதில்கள் தவறாக இருந்தன. பல பதில்களில் முரண்பாடுகள் உள்ளன. சரியான விடையாக இருந்திருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். நவ. 8- ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. எனவே, நான் அளித்த சரியான விடையின் அடிப்படையில் என்னையும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். தவறான பதில்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கவும், அதுவரையிலும் பொருளாதாரம் பாடத்திற்கு யாரையும் நியமிக்க கூடாது எனவும், எனக்கு பணி வழங்கவும் உத்தரவிட வேண்டும்.’ என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.எம்.வேலுமணி, மனு குறித்து டிஆர்பி தலைவர், உயர்கல்வித்துறை செயலர், பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நவ. 12- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.