![incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/ullux4VQMWV1pFAsBwlm18-udjA6-_b9SEB-J8aQFwY/1654176738/sites/default/files/inline-images/zz6_5.jpg)
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள தாட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மரியமிக்கேல் (29). தனியார் கார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர். இவருக்கும் முக்கூடல் பக்கமுள்ள சிங்கம்பாறையைச் சேர்ந்த அந்தோணி மகள் பேபி ஜான்சிராணிக்கும் (28) கடந்த மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
இந்தச் சூழலில் நேற்று முன்னம் தாட்டான்பட்டியிலுள்ள தேவாலயத்தில் திருவிழா நடந்திருக்கிறது. திருவிழா, விடுமுறை என்பதாலும் ஒய்வின் காரணமாகவும் மரியமிக்கேல் மது அருந்தி விட்டு வந்திருக்கிறார். பேபி ஜான்சிராணி கணவனைக் கண்டித்திருக்கிறார். அதனால் ஆத்திரமான மரியமிக்கேல் மனைவியை அடித்திருக்கிறார். கணவன் அடித்தால் நொந்து மனமுடைந்து போன பேபி ஜான்சிராணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். உடனே அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்கிற வழியில் உயிரிழந்தார். இதையறிந்த மரியமிக்கேல் போலீஸ் விசாரணை மற்றும் கைதுக்கு பயந்து தலைமறைவானார்.
இந்நிலையில் அம்பை நகரின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே பொத்தைப் பகுதியில் மரியமிக்கேல் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்து கிடந்திருக்கிறார். தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த அம்பை போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது பேபி ஜான்சிராணி தற்கொலை குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசாரும், மரியமிக்கேல் தற்கொலை குறித்து அம்பை போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஆறு மாதமே ஆன தம்பதியர் என்பதால் இது தொடர்பாக தென்காசி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.