
இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், அறிகுறி உள்ளவர்களையும் அறிகுறி இல்லாதவர்களும் அரசு ஒரே விதத்தில் அணுகுகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு முக கவசம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் யோசனை கூறினார். ஆனால் முதல்வரின் உத்தரவுபடி குடிசை பகுதி மக்களுக்காக 46 லட்சம் முகக் கவசங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன. 75 ஆயிரம் படுக்கை வசதிகள் தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 12 லட்சத்து 35 ஆயிரத்து 62 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
முதியவர்கள், இதய நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக உள்ளது. களப்பணியாளர்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை, ஆர்செனிக் ஆல்பம் மருந்துகள் வழங்கப்படுகிறது. அதிக பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு சமூக பரவலாக இல்லை. வீடு வீடாகச் சென்று காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 4,343 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்ட ஒரு எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஏழு நாட்களாக மூவாயிரத்தை தாண்டி பதிவான நிலையில் இன்று முதன் முறையாக தமிழகத்தில் 4,300க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 2,027 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் ஒட்டுமொத்தமாக 62,598 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 28வது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது நாளாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அரசு மருத்துமனைகளில் 37 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,321 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 33 வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 357 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,095 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் இதுவரை 56,021 பேர் மொத்தமாக குணமடைந்து இதுவரை வீடு திரும்பியுள்ளனர்.
மதுரையில் இன்று ஒரே நாளில் 259 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 3,117 என்ற எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4,139 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய இன்றைய நிலவரப்படி திருவள்ளூரில் 74 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் பெண் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 87 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை சேலம் மாவட்டத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,034 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 488 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். விழுப்புரத்தில் ஒரேநாளில் 46 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.