Skip to main content

திருவந்திபுரம் கோயில் வாசலில் திருமணங்கள்!

Published on 25/04/2021 | Edited on 25/04/2021

 

tn lockdown temples marriage couples

 

கடலூர் மாவட்டம், திருவந்திபுரத்திலுள்ள தேவநாதசுவாமி கோயில் சின்ன திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் 100- க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் முறையாக மணமக்களின் குடும்பத்தினர் திருமணத்திற்கான அனுமதி வேண்டி விண்ணப்பித்த பிறகு தான் இங்கு திருமணம் நடத்தப்படும். அதற்காக, அவர்களுக்கு அரசின் மூலம் பதிவு சான்றிதழ் வழங்கப்படும்.

 

tn lockdown temples marriage couples

 

இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆலயங்களில் திருமணம் உள்ளிட்ட விழாக்கள் நடத்த தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இன்று (25/04/2021) ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று (24/04/2021) இரவு முதல் அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று (25/04/2021) முகூர்த்த நாளில் பல்வேறு குடும்பத்தினர் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் திருமணம் நடத்துவதாக முன்பே திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கோயில் மூடப்பட்டதால் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மூடப்பட்ட கோயிலின் எதிரே உள்ள சாலையில் தங்களது முக்கியக் உறவினர்களுடன் திருமணங்களை நடத்தினர். இன்று (25/04/2021) சுமார் 50- க்கும் மேற்பட்ட திருமணங்கள் சாலைகளிலேயே நடைபெற்றன. கோயில் அர்ச்சகர்கள் சாலைக்கு வந்து அவசர அவசரமாக மந்திரங்கள் ஓதி திருமணங்களை நடத்தி வைத்தனர்.

 

tn lockdown temples marriage couples

 

அதேபோல் விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் திருக்கோயிலும் மூடப்பட்டிருந்தது. இதனால் இந்த கோயிலில் முன்கூட்டியே திருமணம் நடத்தி முடிக்க திட்டமிட்டிருந்த மணமக்களின் குடும்பத்தினர், அதன் தொடர்ச்சியாக மணமக்களை இன்று கோயிலுக்கு அழைத்து வந்தனர். பின்பு கோயில் வாசலுக்கு முன்பு மணமக்களை நிற்க வைத்து திருமணங்களை நடத்தி முடித்தனர்.

 

tn lockdown temples marriage couples

 

ஏற்கனவே, நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் திடீரென அரசு அறிவித்த முழு ஊரடங்கினால் சாலையில் நடக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானதாகவும், தங்களது உறவினர்கள், நண்பர்களை அழைத்து விமரிசையாக நடத்த முடியவில்லை என்று மணமக்கள் வீட்டாரின் குடும்பத்தினர் ஆதங்கத்துடன் கூறினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.