Skip to main content

கோரிக்கை வைத்த முதல்வர்; அழைப்பு விடுத்த பினராயி விஜயன்

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

tn cm mk stalin request accepted by kerala cm pinarayi vijayan in nagercoil meeting

 

செருப்பு அணியக்கூடாது, குடை பிடிக்கக் கூடாது, மீசை வைக்கக் கூடாது ஆபரணங்கள் அணியக்கூடாது, பெண்கள் மாா்பை மறைக்கக் கூடாது என சனாதனத்தின் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உாிமை போராட்டங்களுக்கு வித்திட்ட தோள் சீலைப் போராட்டத்தின் 200 ஆம்  ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை நாகா்கோவிலில் நடந்தது.

 

இந்தக் கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வீரபாண்டியன் மற்றும் சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திருவனந்தபுரத்தில் இருந்து வந்த பினராயி விஜயன் மதுரையில் இருந்து வந்த ஸ்டாலின் இருவரும் ஒன்றாக மேடைக்கு வந்தனா்.

 

பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழகத்தில் நடந்த சமூக நீதி வரலாற்றில் வீரம் மிகுந்த போராட்டங்களில் ஒன்றாக பதிவாகி இருக்கும் தோள் சீலை போராட்டத்தின் 200வது ஆண்டு விழாவில் பங்கெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாய்ப்புக்கு நன்றி. சனாதனத்தின் பாகுபாடுக்கு எதிராக சமூக நீதிக்கு வித்திட்ட தோள் சீலைப் போராட்டம் என அடைமொழி கொடுத்து அதன் 200வது ஆண்டு விழாவை சிறப்பான மாபெரும் பொதுக்கூட்டமாக நடக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினரும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருப்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், நாகரிகம் தமிழகத்தில் உயர்ந்து இருப்பதை உணர வேண்டும்.

 

tn cm mk stalin request accepted by kerala cm pinarayi vijayan in nagercoil meeting

ஒரு காலத்தில் ஓட்டல்களில் அனைவரும் போக  முடியாது. நாடக கொட்டகைகளில் நுழைய முடியாது. ரயில்களில் உயர் சாதியினர் சாப்பிட தனி இடம் இருந்தது. ரயில்களில் தனிப்பெட்டிகள் வைக்க கோாிக்கை எழுந்தது.  80 வயது கடந்தவா்களிடம் கேளுங்கள் அவர்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டில் நடந்த மாற்றங்கள். எப்படி இருந்த நாம் இப்போது எப்படி உயர்ந்து இருக்கிறோம். அப்படிப்பட்ட கால மாற்றத்தை உணர்ந்த இடமாக இந்த தோள் சீலை போராட்டத்தின் 200ம் ஆண்டு அமைந்து இருக்கிறது. தமிழ்ச் சமுதாயம் ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே செழிப்பாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது. மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் சாஸ்திர சம்பிரதாயங்கள் பெயரால் மனிதா்களை மனிதன் பாகுபடுத்தி விட்டான். தீண்டாமையை புனிதமாக்கினான். மனிதனை மனிதன் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, நோில் வரக்கூடாது. மேலும் பெண்கள் வீட்டுக்குள்ளே முடக்கப்பட்டனா். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு இல்லாமல் ஆக்கினார்கள்.

 

இதற்கு வள்ளலார், அய்யா வைகுண்டர், தந்தை பொியாா் நடத்திய சீர்திருத்த இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை இந்தளவு தலை நிமிர வைத்துள்ளது. பக்தி வேறு பாகுபாடு வேறு என்பதை உணா்த்தியவா்கள் தான் இந்த தலைவர்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் குடை எடுத்துப் போகக் கூடாது; செருப்பு அணியக்கூடாது; வீட்டுக்கு ஓடு போடக்கூடாது; ஒரு மாடிக்கு மேல் கட்டக்கூடாது. திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவித்த துன்பங்கள் துயரங்கள் என்பது மற்ற பகுதிகளில் இல்லாதது. குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த பெண்கள் மார்பில் சேலை போடக்கூடாது என்ற இழிவுகள் வேறு எங்கும் இல்லை. இதை மீறி சேலை போட முயன்ற பெண்கள்  தாக்கப்பட்டார்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.

 

இதை விட கொடுமை முலை வரி என்ற வரியை கொண்டு வந்தார்கள். இதை விட அநியாயம் இருக்க முடியுமா? அப்படி வரி கட்ட முடியாமல் பெண் ஒருவர் தனது மார்பை அறுத்து எாிந்தாள். முலை வரிக்கு எதிராக 1822-ல் போராட்டம் தொடங்கியது. தொடர்ந்து 50 ஆண்டுகள் இந்த வீரமிக்க போராட்டம் நடந்தது. அய்யாவழி என்ற ஒரு புதிய வழியை உருவாக்கி அய்யா வைகுண்டா் இந்த போராட்டத்திற்கு துணை நின்றார். திறந்த மார்புடன் பெண்கள் இருக்கக் கூடாது என்று தொடர்ந்து பரப்புரை செய்தார் அய்யா வைகுண்டர். அன்புக்கொடி என்ற மதக் கொடியை உருவாக்கி அடித்தட்டு மக்களுக்கு தலைப்பாகையை கட்டி விட்டார். பெண்கள் இடுப்பில் குடம் கொண்டு வரக்கூடாது என்றிருந்த தடையை மீறி பெண்கள் தண்ணீா் குடத்தை இடுப்பில் வைத்து வர வேண்டும் என்று கட்டளை இட்டாா் அய்யா வைகுண்டர். வைகுண்டர் தாழக் கிடப்பாரை  தற்காப்பதே தர்மம் என்று சொன்னவா்.

 

இதன் விளைவாகத் தான் 1985-ல் உத்திரம் திருநாள் மன்னர் தோள் சீலை அணிய பெண்களுக்கு உரிமை உள்ளது என்ற உத்தரவை பிறப்பித்தார். 1924-ல் கேரளாவிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்காக போராடிய  கேரளா சீா்திருத்தவாதிகளை கைது செய்ததால் அந்த போராட்டம் அப்படியே நின்று விடக்கூடாது என்ற மனப்பக்குவத்தால் தந்தை பொியாா் வைக்கம் சென்று போராட்டம் நடத்தி வெற்றியும் கண்டார். அந்த வைக்கம் போராட்டம் தான் எனக்கு ஊக்கம் அளித்தது என்று அண்ணல் அம்பேத்கர் கூறினார். அந்த வைக்கம் போராட்டத்தின் 100வது ஆண்டு அடுத்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதை தமிழக அரசும் கேரளா அரசும் இணைந்து கொண்டாட ஆசைப்படுகிறேன் அதை இப்போது நம்மோடு இருக்கும் முதல்வர் பினராயி விஜயன் முன் கோரிக்கையாக வைக்கிறேன். தானாக மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. நம்முடைய தலைவர்கள் முன்னோடிகளின் போராட்டங்களால் அவர்களின் தியாகங்களால் தான் மாறியிருக்கிறது" என்றாா்.

 

tn cm mk stalin request accepted by kerala cm pinarayi vijayan in nagercoil meeting

கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசும் போது, "திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த மாா்பு மறைக்கும் போராட்டமும் தோள் சீலை போராட்டமும் ஒன்றுதான். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மன்னர் மாா்த்தாண்ட வா்மன் இங்கு இனி சனாதன ஆட்சி தான் நடக்கும் எனக் கூறி அடக்குமுறையை கையாண்டதால் பல சமூக பெண்கள் மார்பை மறைக்க முடியாத நிலை இருந்தது. இதன் மூலம் பெண்கள் கொடுமைகள் துன்பங்களை அனுபவித்தனா். தற்போது சனாதன ஆட்சி நடத்தும் பாஜக தங்களை எதுவும் செய்ய முடியாது என கூறிய நிலையில் பீகாரில் அடி விழுந்துள்ளது. அங்கு பாஜக வுக்கு எதிராக நிதிஷ்குமார் எழுந்துள்ளார். இது அங்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 2024-ல் பாஜகவின் மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க வேண்டும். பாஜக ஆட்சியின் துன்பத்தை மக்கள் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம் என இந்தியாவை மாற்ற வேண்டுமென மோடி நினைக்கிறார். வைக்கம் நூற்றாண்டு விழாவை நடத்தும் போது அதில் ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும் என்று இப்போதே அழைப்பு விடுக்கிறேன்" என்றாா். 

 

 

சார்ந்த செய்திகள்