சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று (26/02/2021) இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது, தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்படி, கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்களில் 6 சவரன் நகை வரை வைத்து விவசாயிகள் மற்றும் ஏழைகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன உள்ளிட்டவை முதல்வர் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, டெல்லியில் இன்று (26/02/2021) மாலை 04.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையக்குழு, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும் என்பதால், விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி உள்ளிட்டவை தொடர்பாக தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்த நிலையில், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நகைக்கடனும் தள்ளுபடி என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.