
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலை கவுண்டம்பாளையத்தில் என்ற கிராமத்தில் தெய்வசிகாமணி என்பவரும், அவரது மனைவி அமலாத்தாள் மற்றும் மகன் செந்தில்குமார் ஆகியோர் பண்ணை வீட்டில் வசித்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் தோட்டத்திற்கு வந்த மர்ம நபர்கள் முதலில் தெய்வசிகாமணியை வெட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவரை காப்பாற்ற முயன்ற அமலாத்தாள் மற்றும் செந்தில்குமார் ஆகியோரையும் மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டுக்கு வந்த சலவை தொழிலாளி ஒருவர், 3 பேரும் வெட்டி கொலை செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அவிநாசி பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு பல்லடம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தடயவியல் நிபுணர்கள் மோப்பநாய் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நகை பணத்திற்காக இந்த கொலை நடந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை, தாய் மற்றும் மகன் என மூன்று பேரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.