![ti](http://image.nakkheeran.in/cdn/farfuture/2_EgissxdebUuq5LUYIPzRsL-LtlCGdG5anqb9DjbYw/1533347684/sites/default/files/inline-images/ti.jpg)
ஐஏஎஸ் பணியமர்த்தும் முறையில் மாற்றம் செய்யக்கூடாது என்று மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரது அறிக்கை: ‘’இந்திய குடிமைப்பணிகள் எனப்படும் ஐஏஎஸ்/ ஐபிஎஸ் பணிகளுக்கான தேர்வுகளை யூபிஎஸ்சி நடத்தி வருகிறது. அந்த தேர்வு முறையில் புதிய மாற்றம் ஒன்றை புகுத்துவதற்கு மத்தியில் ஆளும் மோடி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஃபவுண்டேசன் கோர்ஸ் எனப்படும் அந்த முறையால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் நல்ல வேலையைப் பெறுவது தடைபட்டுவிடும். எனவே, இந்த முயற்சியைக் கைவிடுமாறு மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது ஒருவர் யுபிஎஸ் சி முதன்மைத் தேர்வில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டே அவருக்கு ஐஏஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளில் பணியமர்த்தம் செய்யப்படுகிறது. அதன்பின்னர் பயிற்சி அளிக்கும் நோக்கோடு ஃபவுண்டேஷன் கோர்ஸ் உள்ளது.
ஆனால், இனிமேல் முதன்மைத்தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்கள் அதன் பிறகு ஃபவுண்டேசன் கோர்ஸை முடிக்க வேண்டும் என்றும், முதன்மைத்தேர்விலும் ஃபவுண்டேசன் கோர்ஸிலும் பெறுகிற மதிப்பெண்களைக் கூட்டி அதனடிப்படைலேயே பணியமர்த்தம் செய்ய வேண்டும் என்றும் மோடி அரசு முடிவெடுத்துள்ளது. இந்த ஆண்டிலிருந்து அந்த முறை நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சமூகநீதிக்கு முற்றிலும் எதிரான ஒன்றாகும். பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் நல்ல பணிகளில் அமர்த்தப்படுவதைத் தடுப்பதற்கான சூழ்ச்சியாகும். பாஜக அரசின் இந்த முடிவுக்குப் பின்னே ஆர்.எஸ்.எஸ் இருக்கலாம் என்ற ஐயம் எழுகிறது.
மோடி அரசு இதை கைவிடாவிட்டால் மிகப்பெரிய போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.’’