நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் சத்திநாயக்கன்பாளையம் கிராமத்தில் கத்தியால் வெட்டப்பட்டு உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் சத்திநாயக்கன்பாளையம் கிராமம், குடித்தெருவைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் செந்தில்குமார் என்பவர் கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி (27.07.2024) அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பிரபுவின் மகள் சிறுமி தஸ்மிதா (வயது 10), பழனியப்பன் மகன் தங்கராசு (வயது 50) மற்றும் ராஜீ மகன் முத்துவேல் (வயது 35) ஆகிய மூவரையும் கத்தியால் வெட்டினார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி தஸ்மிதா சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தஸ்மிதா இன்று (22.08.2024) உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்து சேலம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தங்கராசு மற்றும் முத்துவேல் ஆகிய இருவருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி தஸ்மிதாவின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பெற்றோருக்கு மூன்று இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.