ஈரோட்டில் பிரபல சிறுநீரக மையத்தின் பெயரை பயன்படுத்தி போலியான முகப்புத்தக கணக்கு மூலம் பொதுமக்கள் பலரிடம் சிறுநீரகம் வாங்கப்படுவதாக போலி வார்த்தை கூறி பண மோசடி செய்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு சம்பத் நகர் சாலையில் கல்யாணி கிட்னி கேர் என்ற சிறுநீரக மையதிற்கு அண்மையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறுநீரகத்திற்கு 3 கோடி ரூபாய் தருவதாக உங்களது மையத்திலிருந்து அறிவிப்பு வந்திருப்பதாகவும், தனக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக எனது இரண்டு சிறுநீரகங்களையும் விற்க வேண்டும் என்பதற்காக நான் 15 ஆயிரம் ரூபாய் முன்பதிவு கட்டணம் செலுத்தி உள்ளேன் என அந்த சிறுநீரக மைய ஊழியர்களிடம் கூறியுள்ளார். ஆனால் சிறுநீரக மைய நிர்வாகம் சார்பில் அந்த மாதிரி எந்த ஒரு அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை என பெண்ணிடம் விளக்கம் அளித்தனர்.
இதன் விபரீதத்தை உணர்ந்து ஈரோடு காவல் கண்காணிப்பாளரிடம் இதுதொடர்பான புகாரை அளித்தது அந்த சிறுநீரக மையம். இதுதொடர்பாக வழக்குகளை பதிவுசெய்து கொண்ட வடக்கு காவல் வடக்கு காவல் நிலைய போலீசார் இது குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறுநீரக விற்பனை குறித்து பல்வேறு மாநிலங்களிலிருந்து அந்த சிறுநீரக மையத்திற்கு தொடர்ந்து தொடர்பு கொண்ட வண்ணம் இருந்ததால் இதனை அடுத்து சிறுநீரக மையத்தின் பெயரில் இருந்த முகப்புத்தக கணக்கு பக்கத்தை முடக்கிய போலீசார். இதுபோன்று போலி முகப்புத்தகக் கணக்கை உருவாக்கி அதன் மூலம் சிறுநீரகம் வாங்கப்படுவதாக மோசடி செய்தவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.
முகப்புத்தக மட்டுமின்றி வாட்ஸ் அப் வாயிலாகவும் இதுபோன்ற மோசடிகள் நடந்துள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த இரண்டு கணக்குகளையும் ஆய்வு செய்தபோது அவர்கள் செல்போன் நம்பர்களை வைத்து சிக்னல்களை ஆராய்ந்த பொழுது அந்த நம்பர்கள் பெங்களூருவை காட்டவே குறிப்பிட்ட அந்த இடத்திற்கு விரைந்த தனிப்படை சிறுநீரக விற்பனை மோசடியில் ஈடுபட்ட நைஜீரியாவை சேர்ந்த இருவரையும் கைது செய்தனர். கொலின்ஸ்டாண்டி, ஸ்டீபன் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
அவர்களிடமிருந்து லேப்டாப்கள், மொபைல் போன்கள், மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள், ஏடிஎம் கார்டுகள் ஆகியவைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இப்படி சிறுநீரக மையத்தின் பெயரை பயன்படுத்தி போலியாக முகநூல் பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்களிடம் பணம் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.