சேலத்தில், கொலை வழக்கில் தொடர்புடைய பெண் உள்பட மூன்று பேரை ஒரே நாளில் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்தவர் சுதர்சன். இவர், கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் டி.வி.எஸ் பேருந்து நிறுத்தம் அருகே நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, ஒரு வாலிபர், சுதர்சனிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் பள்ளப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சேலம் அம்மாபேட்டை குருவரெட்டியூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் விவேக் என்கிற கிட்டுவை (21) கைது செய்தனர்.
கிட்டு, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே சாணாதிக்கல் மேடு பகுதியில் ஒரு வீட்டில் பீரோவை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருள்கள், ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற வழக்கும் உள்ளது. இந்த குற்றங்கள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிணையில் வெளியே வந்த அவர், கடந்த மே 6ம் தேதி, அங்கம்மாள் காலனி அருகே, குகை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் நடந்து சென்றபோது, அவரிடம் கத்தி முனையில் மிரட்டி 550 ரூபாய் பறித்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் கிட்டுவை காவல்துறையினர் மீண்டும் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சேலம் பள்ளிப்பட்டி சாமியார் கரடு பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் பசுபதி (24). இவர் மீதும், கத்திமுனையில் பலரிடம் பணம் பறித்தது, அடிதடி வழக்குகள் உள்ளன. இதையடுத்து பசுபதியும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சேலம் அழகாபுரம் பெரியபுதூரைச் சேர்ந்த விஜயலட்சுமி (34) என்பவர், தனது ஆண் நண்பரான குமரன் என்பவருடன் சேர்ந்து கொண்டு, கணவர் வெங்கடேசனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கணவரை கொலை செய்த இவர்கள், தலையை தனியாக அறுத்துள்ளனர். பின்னர் தலையையும், உடலையும் ஒரு பாழடைந்த கிணற்றில் வீசியுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே குமரன், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மேற்படி விவேக் என்கிற கிட்டு, பசுபதி, விஜயலட்சுமி ஆகியோர் சட்ட விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டதோடு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.
அதன்பேரில், காவல்துறையினர் மூன்று பேரையும் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சிறையில அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் கைது ஆணை நேரில் வழங்கப்பட்டது.