Skip to main content

ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

Published on 12/01/2025 | Edited on 12/01/2025
Thousands of devotees participate Arudra Darshan Festival chariot procession

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி மாதம் நடக்கும் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

கொடியேற்றம்

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கடந்த 8-ந்தேதி தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி காலை 4.30 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு, நடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 6.30 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரத்துடன் மூலவராகிய ஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சித்சபையில் இருந்து புறப்பாடாகி கீழவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர்.

தேரோட்டம்

அதாவது, நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து காலை 8.45 மணி அளவில் நடராஜர் தேரை அங்குக் கூடி நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியபடி வடம் பிடித்து இழுத்தனர். அப்போது நாதஸ்வரம், செண்டை மேளம், சிவ வாத்தியங்கள், தாரை, தப்பட்டைகள் முழங்க தேர் வீதி வலம் வந்தது. அதையடுத்து விநாயகர், முருகர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் தேரும் வலம் வந்தது.

லட்சார்ச்சனை

தேரோடும் வீதிகளில் பெண்கள் வண்ண, வண்ண கோலமிட்டு சாமியை வரவேற்றனர். காளியாட்டம், பரதநாட்டியமும் நடந்தது. சிவன், பார்வதி வேடமிட்ட பக்தர்களும் கைலாய வாத்திய கருவிகளின் இசைக்கு ஏற்ப நடனமாடினர். மேலும் பெண்கள் கும்மியடித்தும், கோலாட்டம் அடித்தும் தேரை வரவேற்றனர்.

தேர் தெற்கு வீதி, வடக்கு வீதியை வந்தடைந்ததும், அங்கு மீனவர்கள் சார்பில் சிறப்பு மண்டகபடி அளிக்கப்பட்டது. அதன்பிறகு தேர் மீண்டும் வடக்கு வீதி, கீழ வீதி வழியாக இரவு  நிலையை வந்தடைந்தது. பின்னர் தேரில் இருந்து சுவாமிகள் இறக்கப்பட்டு, கோவிலில் உள்ள ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் வைக்கப்பட்டது. அங்கு நடராஜருக்கு ஏக கால லட்சார்ச்சனை நடந்தது.விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆருத்ரா தரிசனம்

13.1.2025(திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பிறகு பிற்பகல் 2 மணிக்கு பிறகு மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.

இதில் ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுடன் 3 முறை முன்னும், பின்னும் ஆடி பக்தர்களுக்கு காட்சி அளித்தபடி கோவிலுக்குள் செல்கிறார். இதுவே ஆருத்ரா தரிசனம் ஆகும். இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையிலான 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சார்ந்த செய்திகள்