![thiruvaru district mannargudi two incident police investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/w69KVdIXmF04bAOJAjzYLwMUpLHJFhQKzrF-wLLuEpA/1605674551/sites/default/files/inline-images/th_211.jpg)
லாரி டிரைவர் கொலை, கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் உடல் மீட்பு என ஒரே நாளில் இரு சம்பவங்களால் மன்னார்குடி பகுதியே பரபரப்பாகிக்கிடக்கிறது.
சம்பவம் ஒன்று:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. 36 வயதான இவர், லாரி டிரைவராக இருந்து வந்தார். அவருக்கு அமலா என்கிற மனைவியும், கோபிகா, ராஜசேகர் என்கிற இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
இந்தநிலையில் அமலாவின் சகோதரரான மன்னார்குடி பாரதி நகரை சேர்ந்த வினோத்தும், மாரிமுத்துவும் மன்னார்குடி தெப்பக்குளம் வடகரை பகுதியில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் வினோத் தனது அக்கா கணவரான மாரிமுத்துவை, அவரது மர்ம உறுப்பில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடியிருக்கிறார். இதில் உள் காயமடைந்து வலியால் துடித்த மாரிமுத்துவை சிகிச்சைக்காக மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து மன்னார்குடி காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு தலைமறைவான வினோத்தை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
சம்பவம் இரண்டு:
நீடாமங்கலத்தை அடுத்துள்ள ஒளிமதி கற்கோவல் பகுதியில் சமீப நாட்களாக பேய்மழை பெய்துவருவதால் மக்கள் நடமாட்டம் முற்றிலுமாக குறைந்துவிட்டது. இந்தநிலையில் அங்குள்ள ஆற்றங்கரையில் 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவரை பாலித்தீன் சாக்கு பையில் கை மற்றும் கால்களை கட்டபட்டு, அழுகிய நிலையில் பிணமாக மிதந்துவந்ததை கண்டெடுத்து நீடாமங்கலம் காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
ஒரேநாளில் இருசம்பவங்களும் நடைபெற்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.