இலங்கையில் நடந்த ஜனநாயகப் படுகொலைக்காக இந்தியா கண்டிக்கவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கை:
’’இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய அரசு இதைக் கண்டிக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இலங்கை அதிபர் மைத்திரிபாலா சிறிசேனா திடீரென புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமனம் செய்தார். அது சட்டவிரோதமான நடவடிக்கை எனவும் ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் எனவும் இலங்கை சபாநாயகர் அறிவித்துவிட்டார். பாராளுமன்றத்தில் ராஜபக்சவுக்குப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் இப்போது பாராளுமன்றத்தையே கலைத்து நள்ளிரவில் அரசாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 19 ஆவது சட்டத்திருத்தத்தின்படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் அதிபருக்கு இல்லை .பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றினால்தான் பாராளுமன்றத்தை நாலரை ஆண்டுகளுக்கு முன்பு கலைக்க முடியும் என இலங்கையின் அரசியல் சட்டம் கூறுகிறது. எனவே, மைத்திரிபாலா எடுத்துள்ள நடவடிக்கை முழுக்க முழுக்க சட்ட விரோதமானதாகும்.
2019 ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும், அதற்கான வேட்பு மனுத்தாக்கல் இம்மாதம் 19ஆம் தேதி துவங்கும் எனவும், இலங்கை அதிபர் அறிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்டுத்தான் தேர்தல் நடத்துவதைப் பற்றி முடிவு செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இனப்படுகொலை குற்றவாளியான ராஜபக்சவோடு கூட்டு சேர்ந்து கொண்டு சட்டவிரோதமாக இலங்கை அதிபர் செயல்படுவது ஈழத்தமிழர்களுக்கும், இலங்கையின் ஜனநாயகத்துக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் ஜனநாயகப் படுகொலையைக் கண்டிக்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.’’