ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவில், புதிய, பழைய பஸ் நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலாத்தலமான தஞ்சை அரண்மனை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நள்ளிரவு முதலே முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனையையும் நடத்தி வருகின்றனர்.
திருவாரூர், நன்னிலம், முத்துப்பேட்டை, மன்னார்குடி, திருத்துறைப் பூண்டி பகுதிகளில் 5 டி.எஸ்.பிக்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாகை மாவட்டத்தில் சுற்றுலா தலங்களான வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா பகுதிகளில் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அதிவிரைவு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம், பொறையாறு ஆகிய இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.