மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணித்திருப்பதாக எதிர்க்கட்சிகளும், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து திமுக தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று பட்ஜெட் மீதான பதிலுரை விவாதம் நடைபெற்றது அதில் பேசிய மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ''கடந்த 2014 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான ஆட்சியில் மத்திய அரசு சுமார் 12.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்திய காங்கிரஸின் பத்தாண்டு கால ஆட்சியில் 2.9 கோடி வேலை வாய்ப்புகள் தான் உருவாக்கப்பட்டிருந்தது. விவசாயிகள் நலன் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கும் காங்கிரஸ் தனது ஆட்சியில் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. வேலையின்மை அளவை 2022-2023 ஆம் ஆண்டில் 3.2 சதவீதமாக குறைத்துள்ளோம். மத்திய பட்ஜெட் மிஷன் 2047 என்பதற்கான முதல் படியாகும்.
பட்ஜெட்டில் 1.46 லட்சம் கோடி சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரை மேம்படுத்த தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 48.21 லட்சம் கோடி. மத்திய பட்ஜெட்டில் நகர்ப்புற வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கு 1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2004-2005 ஆண்டு ஆட்சியில் பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர் இடம் பெறவில்லை. அவற்றுக்கு யுபிஏ அரசு நிதி தரவில்லையா? 2009-2010 ஆண்டு பட்ஜெட்டில் 26 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. நீங்கள் செய்தால் தவறில்லை நீங்கள் செய்தால் மட்டும் தவறா? இதில் பெயர் அறிவிக்காததால் அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என சொல்வது அர்த்தமல்ல. தவறான புரிதலோடு சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் கூறிய தவறான கருத்துக்கள் எனக்கு ஆழ்ந்த வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது. தவறான கருத்துக்களைப் பரப்பும் செயலில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன''என்றார்.