
சென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கொலை செய்தவர்கள் சடலத்துடன் இரண்டு மணி நேரம் இருந்ததோடு சடலத்தின் அருகில் இறைச்சி சாப்பிட்டுவிட்டு மது அருந்தியதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை விருகம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த வழக்கறிஞர் வெங்கடேஷ் என்பவரின் உடல் அழுகிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30/03/2025) மாலை கண்டெடுக்கப்பட்டது. குறிப்பாக அவருடைய தலையில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அடுத்த நாளான 31/03/2025 அன்று வெங்கடேசின் கார் ஓட்டுநர் கார்த்திக் என்பவரையும் அவருடைய உறவினர் ரவி என்பவரையும் கைது செய்தனர்.
வானகரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட பொழுது அவர்களிடமிருந்து பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த 27ஆம் தேதி இந்த கொலை நடந்ததும், கொலை நடந்த பிறகு சடலத்தின் அருகிலேயே இரண்டு மணி நேரம் இருந்த அவர்கள் இறைச்சி வாங்கி வந்து சாப்பிட்டதோடு மது அருந்தி விட்டு பின்னர் காரில் தப்பி ஓடியதும் தெரிய வந்தது. கொலை செய்த அடுத்த நாளான 28ஆம் தேதி முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் இருவரும் சரணடைய சென்ற பொழுது சென்னையில் சரணடையுங்கள் என காவல் ஆய்வாளர் கூறியதாகவும் பின்னர் கேரளாவிற்கு தப்பி சென்று விட்ட நிலையில் காவல்துறைக்கு இது தொடர்பாக தகவல் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.