Skip to main content

“ஆணவ மொழியில் சொல்லி இருக்கிறார்” - நிர்மலா சீதாராமன் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
"He is speaking in the arrogant language he knows" - Nirmala Sitharaman's comments, Minister Thangam South condemns

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''தென் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கிய மொத்தம் 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த மழை வெள்ள பாதிப்பால் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. மத்திய அரசை சேர்ந்த எல்லா துறைகளும் ஒத்துழைத்து உடனடியாக எல்லாரும் சேர்ந்து களத்தில் இறங்கினார்கள். ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 800க்கும் மேற்பட்ட பயணிகள் அங்கேயே தவித்துக் கொண்டிருந்தார்கள். முன்னவும் போக முடியல, பின்னவும் போக முடியல என்ற நிலைமை இருந்தது. அந்த ரயில் நிலையத்திலேயே சிக்கித் தவித்துக் கொண்டிருந்த பயணிகளை ரயில்வே சார்பில் சிறப்புப் பேருந்து வசதி கொடுத்து அவர்கள் எல்லோரும் மீட்கப்பட்டார்கள்.

அதைத் தவிர 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட ரயில்வே, மற்ற எல்லா துறைகளுடன் சேர்ந்து நல்ல விதமாக சமயத்தில் உதவி செய்தார்கள். உள்துறை அமைச்சகத்தில் இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் இருக்கின்றன. அந்த இரண்டும் தென் மாநிலங்களின் நிலையை 24 மணி நேரமும் மானிட்டர் செய்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வருவதால், மேலும் தென் மாவட்டங்களுக்கு போக வேண்டிய உதவிகளைத் தொடர்ந்து இன்னொரு முறை யாரும் கேட்கத் தேவையில்லாத அளவிற்கு உடனுக்குடனே அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய ஏர்போர்சின் ஐந்து ஹெலிகாப்டர்கள், நேவியை சேர்ந்த ஆறு ஹெலிகாப்டர்கள், கோஸ்ட் கார்டை சேர்ந்த ஒரு ஹெலிகாப்டர் என மொத்தம் ஒன்பது ஹெலிகாப்டர்கள் மூலம் 42 ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதில் மாநில அரசால் மீட்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். அந்த 9 ஹெலிகாப்டர்கள் டிசம்பர் 21 ஆம் தேதி மாலை வரைக்கும் ஒவ்வொரு ஹெலிகாப்டரும் 70 முறை சென்று மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது.

மத்திய அரசு செய்து கொண்டே இருக்கும். ஆனால் மாநில அரசு இதுபோன்ற நான்கு கேள்விகளை புகுத்திவிட்டு எங்களிடம் கேட்கச் சொல்லி போய்க் கொண்டே இருப்பார்கள். அதற்கு நாங்கள் பதில் கொடுக்கணும். பணம் மாத்திரம் கொடுக்கும். எவ்வளவு வேணும்னாலும் கொடுக்கிறோம். இன்னைக்கும் கொடுக்கிறோம். என்ன நடந்துச்சு. ஒரு ரயில்வே லைனுக்கு கீழ கட்டின பாலத்திற்குள் கீழே தண்ணீர் திரும்பி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்டுக்குள் வருது. அதற்கு மத்திய அரசு பொறுப்பா? அங்குள்ள தொழில்துறையில் இருப்பவர்களை போய் கேளுங்கள். மழைக்கு முன் 92 சதவீதம் வடிகால் பணி முடிந்தது என்று கூறினார்கள். மழைக்குப் பின் 45 சதவீதம் பணிகளே நிறைவு என மாற்றி பேசினார்கள். 4000 கோடி என்னவானது? 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் மாநில அரசு கற்றுக்கொண்ட பாடம் என்ன? தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது. இதுவரை எந்த மாநிலத்திலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவித்ததில்லை. அதற்கான வழக்கம் இல்லை'' என்றார். 

"He is speaking in the arrogant language he knows" - Nirmala Sitharaman's comments, Minister Thangam South condemns

இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “புயல், மழைக்குப் பிந்தைய நிவாரண நடவடிக்கைகள் காரணமாக ஒவ்வொரு பகுதியும் படிப்படியாக மீண்டு வருகிறது. நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கி வருகிறோம். இதுகுறித்து நான் அதிகம் விவரிக்கத் தேவையில்லை. வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் மட்டுமல்ல, ஊடகங்களின் வாயிலாக கடந்த மூன்று வார காலமாக நாட்டு மக்கள் இந்தச் செய்திகளைத்தான் அதிகம் அறிந்து வருகிறார்கள். நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த இந்த பாதிப்புச் செய்தி, இந்தியாவில் ஒரே ஒருவருக்கு மட்டும் தெரியவில்லை. அவர்தான் இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன்  ஏதோ எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பதில் தமிழ்நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துவது ஆகும்.

தமிழ்நாட்டில் டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளிலும், 17, 18 ஆகிய இரு நாட்கள் தென் மாவட்டங்களில் பெய்த மழை என்பது வரலாறு காணாதது ஆகும். 50 ஆண்டுகள் கழித்து பெய்கிறது, 100 ஆண்டுகள் கழித்து பெய்கிறது என்று சொல்லத்தக்க மழையளவு ஆகும். எனவேதான் அது ஏற்படுத்திய பாதிப்பு என்பது மிகமிக அதிகமானது. இதனை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காகத் தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரி உள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் முழுமையாக அளவிடப்படவில்லை. எனவே, அவசர நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி தரவேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரியுள்ளார். ஆக மொத்தம் 21 ஆயிரத்து 692 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு வைத்துள்ள கோரிக்கை என்பது கடும் பேரிடராக (Calamity of severe nature) அறிவிக்க வேண்டும் என்பதும், 21 ஆயிரம் கோடியை நிவாரணமாகத் தர வேண்டும் என்பதும் ஆகும். இந்த இரண்டும் கிடையாது என்பதைத்தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்குத் தெரிந்த ஆணவ மொழியில் சொல்லி இருக்கிறார். திமுக அரசையும், முதலமைச்சரையும் அவமானப்படுத்துவதாக நினைத்து, தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்