
'தற்கொலை எண்ணம் தவறானது'- மன அழுத்தமோ தற்கொலை எண்ணமோ ஏற்பட்டால் அதிலிருந்து நீங்கி விடுபட தமிழக சுகாதார சேவை உதவி மையம் 104-ஐ அழைக்கவும்.
மொபைல் போனுக்கு அடிமையான கல்லூரி மாணவர் ஒருவர் தனக்குத் தானே ஊசி செலுத்திக் கொண்டு உயிரிழந்த சம்பவம் கொடுங்கையூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை கொடுங்கையூர் மூலக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பால் யூட்டி கிளாஸ் (20). தனியார் கல்லூரியில் பொறியியல் பயின்று வந்த பால் யூட்டி கிளாஸ் அளவுக்கு அதிகமாக மொபைல் போன் பயன்படுத்தி வந்த நிலையில் அதற்கு அடிமையாகி தூக்கம் இல்லாமல் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கல்லூரி மாணவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடும் மன அழுத்தத்தில் இருந்த அவர் கழிவறையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அப்பொழுது ஏற்கனவே இளைஞர் பால் யூட்டி கிளாஸ் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சோடியம் நைட்ரேட் மருந்து கலந்த ஊசியை தனுக்கு தானே செலுத்தி கொண்டதால் அவர் உயிரிழந்த தெரியவந்துள்ளது. தற்கொலை எண்ணத்தோடு மாணவர் ஊசி செலுத்திக்கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.