
ஆளும் பா.ஜ.க அரசையே சொந்த கட்சி எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ள சம்பவம் மத்தியப் பிரதேச அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், கடந்த சில நாட்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில், மாநில வருவாய் அமைச்சர் கரண் சிங் வர்மாவின் கீழ் வரும் வருவாய்த் துறை, சஹாரா குழுமம் சம்பந்தப்பட்ட சமீபத்திய நில பரிவர்த்தனைகள் ஆகிய விஷயங்கள் குறித்து காங்கிரஸ் மற்றும் ஆளும் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்பினர்.
எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கான பதில்கள், சட்டமன்ற நூலக இணைப்புகளில் இருப்பதாக வருவாய்த் துறையினர் சட்டப்பேரவையில் கூறினர். ஆனால், அத்தகைய தகவல்கள் எதுவும் இணைப்புகளில் இல்லை என்று தகவல் வெளியாகியதால் கேள்வி கேட்ட எம்.எல்.ஏக்கள் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சட்டப்பேரவையில் கேட்கப்படும் பல கேள்விகளுக்கு துறை சார்பில் உரிய பதிலளிப்பதில்லை என குற்றம் சாட்டி காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், காணாமல் போன இணைப்புகளை வருவாய்த் துறையிடம் இருந்து பெற வேண்டும் என சட்டமன்ற முதன்மை செயலாளருக்கு சபாநாயகர் நரேந்திர சிங் தோமருக்கு உத்தரவிட்டுள்ளார். சொந்த கட்சி எம்.எல்.ஏக்களே ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக குற்றம் சாட்டியது என்பது மாநிலத்தில் பெரும் சர்ச்சையாகி வருகிறது.