
நித்தியானந்தா கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதாவது நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் என்பவர் வீடியோ மூலமாக ஆன்மீக சொற்பொழிவில் இந்த தகவலைத் தெரிவித்ததாக கூறப்பட்டது. அதே சமயம் நித்தியானந்தாவிற்குச் சொந்தமான சுமார் 4 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க இந்த முயற்சி நடைபெறுகிறதா? எனவும், அவர் மீதான வழகுகளிலிருந்து தப்பிக்க இவ்வாறு தகவல் பரப்பப்படுகிறதா எனவும் குழப்பம் எழுந்திருந்தது.
தொடர்ந்து நித்தியானந்தா தொடர்பாகப் பரவிய செய்திகளுக்கு கைலாசா முகநூல் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “நித்தியானந்தா இறந்து விட்டதாகப் பல ஊடகங்கள் வேண்டுமென்றே தீங்கிழைக்கும் விதமாக கூறி வருகின்றன. ஆனால் நித்தியானந்தா ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், சுறுசுறுப்பாகவும், உயிரோடும் உள்ளார். நித்தியானந்தாவை இழிவுபடுத்தவும், அவதூறு பரப்பவும் மேற்கொள்ளப்படும் இந்த தீங்கிழைக்கும் அவதூறு பிரச்சாரத்தை கைலாசா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது 'என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ''நான் உயிரோடு இருக்கேனா இல்லையா என எனக்கே சந்தேகம் வருகிறது'' என நித்தியானந்தா பேசும் வீடியோ ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ''நிறைய பேரு நான் செத்துபோய் விட்டேன் என வீடியோ போட்டு இருக்கிறார்கள் போல இருக்கு. மூன்று மாதத்தில் 4000 வீடியோ போட்டிருக்கிறார்கள். சிலபஸ் கவர் பண்ணி முடிக்காமல் எக்ஸாமுக்கு போன ஸ்டுடென்ட் மாதிரி நான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன். எனக்கே சந்தேகமாக இருக்கிறது நான் உயிரோடு இருக்கேனா இல்லையானு. எல்லா சோஷியல் மீடியா, மெயின் ஸ்ட்ரீம் மீடியா, பேஸ்புக், யூடியூப் எல்லாம் ஒண்ணா சேர்ந்து பஞ்சாயத்து கூடி, ஏதோவொரு வீடியோவை போட்டு நான் உயிரோடுதான் இருக்கேனா இல்லையா எதாவது ஒரு முடிவுக்கு வாங்கப்பா. எப்படியோ எனக்கு வந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்க அவ்வளவுதான்'' என பேசியுள்ளார்.