தஞ்சை மாவட்டத்தில் ஓடிப் பாயும் கல்லணை தண்ணீர் கால்வாய்கள் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் வந்து பாய்கிறது. இதில் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள காட்டாத்தில் கிராமத்திற்கு தஞ்சை மாவட்டம் தளிகைவிடுதியில் இருந்து சுமார் 1.5. கி.மீ தூரத்திற்கு ஒரு வாய்க்காலில் வந்து பெரிய ஏரியை நிரப்பி சுமார் 300 ஏக்கர் விளைநிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்த வாய்காலைத் தான் சில நாட்களுக்கு முன்பு சிலர் 100 மீட்டர் அளவிற்கு சமப்படுத்தி விவசாய நிலமாக ஆக்கிரமித்துக் கொண்டனர்.
இதைப் பார்த்த விவசாயிகள் கறம்பக்குடி வட்டாட்சியரிடம் காணாமல் பொன கல்லணை வாய்க்காலை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். தண்ணீர் வரத் தொடங்கிவிட்டதால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் கடத்தினால் விவசாயிகள் போராட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளதை கூறினார்கள். இது சம்மந்தமாக நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியானது.
இந்த நிலையில் வாய்க்கால் காணாமல் போன இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் வாய்க்காலை கண்டுபிடித்து பொக்கலின் மூலம் மீண்டும் வாய்க்காலை சீரமைத்துக் கொடுத்தனர். இதனால் காட்டாத்தில் பகுதி விவசாயிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி கூறினார்கள்.