தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்கள் குறித்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினார். அந்த வீடியோவில் திமுகவைச் சேர்ந்த முக்கியமானவர்களின் சொத்து மதிப்புகள் குறித்து காட்சிகள் இருந்தன. அண்ணாமலை வெளியிட்ட இந்த சொத்து பட்டியலில் திமுகவை ஜி ஸ்கொயர் நிறுவனத்தோடு இணைத்து பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று காலை முதல் சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவன அலுவலகங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது.
தமிழகத்தைத் தாண்டி கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் பெங்களூருவில் உள்ள கோரமங்களா என்ற இடத்தில் இருக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்குத் தொடர்பான இடங்களில் இரண்டாம் நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் நேற்று அமலாக்கத்துறையினர் செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சோதனையும் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது. சென்னை எழும்பூரில் உள்ள செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறை இன்றும் சோதனை நடத்தி வருகிறது.