
தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார். இந்த நிலையில் அவர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நேற்று இரவு வந்தார் அப்போது அவரை சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் மற்றும் வட்டாட்சியர் ஆனந்த் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து கோவில் தீட்சிதர்கள் கும்பமரியாதை அளித்து அவரை கோவிலுக்கு அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர். இதனைத் தொடர்ந்து சாமி தரிசனம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், " புதுச்சேரியில் என்ன குறைபாடுகள் உள்ளது என்பதை கண்டறிந்து புதுச்சேரி மாநிலத்தை மேம்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்வேன், அதே நேரத்தில் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து அரசியல் பணிகளையும் செய்ய உள்ளதாகவும், புதுச்சேரியில் மாணவர்களுக்கு வாரத்திற்கு தற்போது ஒரு முட்டை வழங்கப்படுகிறது. நான் மருத்துவர் என்பதால் அது அவர்களுக்கு போதாது என்பதை கருதி 3 முட்டைகள் வழங்குவதற்கு கோப்புகளை தயார் செய்யும் பணிக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில கவர்னராக உள்ள நான் 2 மாநிலத்தையும் இரட்டை குழந்தைகள் தான் பார்க்கிறேன். புதுச்சேரியில் நாளை 22-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வில்லை என்றால் அடுத்த கட்ட முடிவு குறித்து கேட்டபோது அதற்கு 22ஆம் தேதி மாலை பார்ப்போம் என மழுப்பலாக பதிலளித்தார். இவருடன் பாரதிய ஜனதா கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் கே பி டி செழியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து தில்லை அம்மன் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். தில்லை அம்மன் கோவில் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும். இந்த நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருவதையொட்டி காவல்துறையினர் கோவில் நிர்வாகிகளிடம் கூறி 9 மணி வரை கதவை சாத்தாமல் காத்திருந்து 9 மணிக்கு அவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். இது வழக்கத்திற்கு மீறிய செயலாக அப்பகுதியில் உள்ளவர்கள் மற்றும் ஆன்மீக பக்தர்கள் கடவுளை காக்க வைத்து சாமி தரிசனம் செய்தார் என கூறுகின்றனர்.