வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நீதிமன்றம் தண்டித்தது. உச்சநீதிமன்றத்தில் ஜெ., வகையறா மேல்முறையீடு செய்துயிருந்தது. அந்த வழக்கில் தீர்ப்பு வரும் முன்பே ஜெயலலிதா இறந்துவிட்டார். அவர் இறந்தாலும் அவர் செய்த ஊழல்கள் ஊர்ஜிதமாகி அவரது வகையறாவினரான சசிகலா, இளவரசி உட்பட மூவர் கர்நாடாகாவின் பார்ப்பன அக்கரஹார சிறையில் தண்டனை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தை ஆண்டுக்கொண்டுள்ள அதிமுக அரசு பொதுயிடங்களில் ஜெயலலிதா சிலைகளை திறக்க முடிவு செய்தது. உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிக்கு எப்படி அரசாங்கம் சிலை திறக்கலாம் என எதிர்கட்சிகள், பொதுநல அமைப்புகள் கேள்வி எழுப்பியதால் அரசின் சார்பில் ஜெ.,சிலைகளை பொதுயிடத்தில் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் திருவண்ணாமலை நகரில் மத்திய பேருந்து நிலையம் அருகில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா சிலைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை, இதனால் மூடியே வைக்கப்பட்டுயிருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் எம்.ஜி.ஆர் – ஜெ சிலைகளை திறக்க அதிமுக நிர்வாகிகள் முடிவு செய்தனர். அனுமதி வாங்காமல் எதையும் திறக்ககூடாது என திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனால் சிலைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது.
அந்த தடைகளை மீறி கடந்த 23ந்தேதி திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் – ஜெ சிலை முன் கூடிய அதிமுகவினர், காவல்துறையின் கண் முன்னாடியே சிலையை திறந்துவைத்தனர். அதோடு, மறுநாள் 24ந்தேதி ஜெ., பிறந்தநாள் அன்று மா.செ.ராஜன் தலைமையிலான அதிமுகவினர் அந்த சிலைகளுக்கு மாலைப்போட்டனர்.
சட்டவிதிகளை ஆளும்கட்சியினரான அதிமுகவினரே பின்பற்றவில்லை. காவல்துறையும் அதனை வேடிக்கை பார்த்துவந்தது, அதோடு, அந்த சிலைக்கு இப்போது பாதுகாப்பும் போட்டுள்ளது காவல்துறை.
இதற்கிடையே அதே திருவண்ணாமலை மாவட்டம், சேத்பட் தாலுக்காவுக்கு உட்பட்ட தேவிகாபுரத்தில் காமராஜர் சிலை பொதுயிடத்தில் அமைக்கப்பட்டு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டுயிருந்தது. வரும் மார்ச் 4ந்தேதி அதை திறந்து வைக்க காங்கிரஸார் அனுமதி கேட்டனர். அதற்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, எஸ்.பி பொன்னி அனுமதி தரவில்லை. இதனால் அதிருப்தியான காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் பிப்ரவரி 26ந்தேதி விடியற்காலை மூடிவைத்திருந்த காமராஜர் சிலையை திறந்து மாலை போட்டுவிட்டு சென்றுயிருந்தனர்.
இந்த தகவல் சேத்பட் காவல்நிலையத்துக்கு செல்ல சேத்பட் போலிஸ் அதிகாரிகள், போளுர் டி.எஸ்.பி சின்னராஜ் போன்றோர் சம்பவயிடத்துக்கு வந்து பார்த்துவிட்டு காமராஜர் சிலையை மீண்டும் துணிப்போட்டு மூட உத்தரவிட அதன்படி துணிக்கொண்டு மூடப்பட்டுள்ளது. அப்பகுதி காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து சட்டவிதிகள் எதுக்கு இருக்கு, அரசியல் கட்சியான நீங்களே மதிக்கலன்னா, பொதுமக்கள் எப்படி மதிப்பாங்க. அதனால் சட்டத்தை மதித்து சிலை திறக்க அனுமதி பெற்று திறங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்.
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளியான ஜெ., சிலையை தமிழகத்தில் பரவலாக திறக்கப்படுகிறது. அதை தடுக்க முடியாமல் பாதுகாப்பு தந்து வேடிக்கை பார்க்கிறது காவல்துறை. ஆனால் கல்வி கண் திறந்தவரும், இறக்கும்போது வெறும் சில நூறு ரூபாய்களை மட்டும்மே வைத்திருந்த கர்மவீரர் காமராஜர் சிலையை திறக்க அனுமதியில்லை என மூடுகிறது மாவட்ட நிர்வாகம்.
ஜெ., இறந்தபோதுதான் சட்டத்தை மதிக்கவில்லை, அவருக்காக சட்டம் குப்புறவிழுந்துக்கிடந்தது என்றால், அவர் இறந்தபின்பும் அவருக்காக சட்டம் பல வகையிலும் வளைந்து, நெளிந்துக்கொடுக்கிறது என வெதும்புகிறார்கள் சமூக நல ஆர்வலர்கள்.
- ராஜ்ப்ரியன்