Skip to main content

ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப விஜயகாந்த் வலியுறுத்தல்

Published on 23/03/2018 | Edited on 23/03/2018
dm

 

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு  பாடம் வாரியாக ஆசிரியர்களை நியமித்து, ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டி தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
''தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 3.92 லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும், 2.17 லட்சம் இடைநிலை ஆசிரியர்களும் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலை பள்ளிகளில் 1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நீண்டகாலமாக நியமிக்கப்படாமல் உள்ளது. தமிழகத்தில் உள்ள உயர்நிலை பள்ளிகளின் எண்ணிக்கை 6,081, மேல்நிலை பள்ளிகளின் எண்ணிக்கை 5,803, இதில் உயர்நிலை பள்ளிகளில் 884 தலைமை ஆசிரியர் பணியிடங்களும், மேல்நிலை பள்ளிகளில் 34 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. 


      மாணவர்களின் கல்வித்தரம் உயர அனைத்து பாடங்களுக்கும், தனித்தனியாக ஆசிரியர்களை பாடம் வாரியாக உடனடியாக நியமிப்பது அவசியமானது. கற்றுத்தருவதற்கு ஆசிரியர்களே இல்லாத நிலையில், மாணவர்கள் எவ்வாறு தேர்வினை துணிவோடு எழுதமுடியும்?. இதனால் மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் அரசு 100% சதவிகிதம் மாணவர்கள் தேர்வடைய வேண்டுமென தலைமை ஆசிரியர்களையும், ஆசிரியர்களையும் கட்டாயப்படுத்துவது நியாயம் தானா?.

 

இந்நிலையில் 2018-2019 ஆம் கல்வி ஆண்டில் 200 அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்ற நிதிநிலை அறிக்கை அறிவிப்பின் மூலம், மேலும் புதியதாக 700 ஆசிரியர்கள் தேவையாக உள்ளது. எனவே மாணவர்கள் மேலும், மேலும் இடற்படாது பயில அந்தந்த பாடங்களுக்கு உரிய ஆசிரியர்களை உடனடியாக நியமித்து, அனைத்து ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நியமித்து, 
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு”
  “மாடல்ல மற்றை யவை”
என்ற திருவள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப அழியாத மேலான செல்வமாகிய கல்வியை, மாணவர்கள் கற்க கசடு அற கற்று தமிழகத்தில் கல்வித்தரம் உயர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.''
 

சார்ந்த செய்திகள்