சென்னையில் இன்று நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் சென்னை வந்தார். அதனை தொடர்ந்து நேற்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார். இந்நிலையில் தமிழக பாஜகவின் உயர்நிலை குழு நிர்வாகிகள் எச்,ராஜா, மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ள உள்துறை அமைச்சரை சந்தித்து பேசினர்.
அதில் தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்தும் பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த அமைச்சர் அமித்ஷா புதிய வியூகம் வகுத்துள்ளாதாகவும், அதை பாஜக நிர்வாகிகளிடம் கூறியதாக தகவல் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்திய துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு எழுதிய புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதன் பிறகு கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் அம்மாநில முதல்வர் எடியூரப்பா மற்றும் அதிகாரிகளுடன் வெள்ள நிவாரணம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவுள்ளார்.