அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் தீவிரவாதம் குறித்துப் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிலிருந்து பிரதமர் மோடி வரை இது குறித்த கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். இந்த சர்ச்சை குறித்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸிடம் பேசினோம்.
கமல்ஹாசன் போன்ற அரசியல்வாதிகள் தமிழக மக்களால் ஓரம் கட்டப்படவேண்டியவர்கள் என்பதை தனது வார்த்தை மூலம் நிரூபித்துள்ளார் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே?
’கட்சியை விட்டு படம் எடுக்கப்போ, அரசியலை விட்டு போ’ போன்ற வார்த்தைகளை எங்களிடம்தான் பிரயோகிக்க முடியும். அவர்கள் அதிமேதாவிகள். பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கோட்சே மீதுதான் பாசம். கோட்சேவுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தால் அவர்கள் பேர் கெட்டுப்போய் விடும், அதனால் இந்து என்ற வார்த்தைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு எங்களை எதிர்க்கிறார்கள். மேலும் அந்த பிரச்சாரக்கூட்டத்தில் இந்து, முஸ்லீம் மதம் குறித்து பேசப்படவில்லை. அனைத்து மதத்திலும் தீவிரவாத அமைப்புகள் உள்ளன.
தமிழகம், டெல்லி உட்பட பல இடங்களில் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறதே?
தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ’கமலின் நாக்கு வெட்டப்பட வேண்டும்’ என்று கூறியிருந்த நிலையில் தமிழக முதல்வர் அமைதியாக இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இது போன்ற அரசியல் எதிரிகளால் போடப்படும் வழக்குகளை சந்தித்துதான் ஆக வேண்டும். அனைத்து வழக்குகளையும் சந்திக்கத் தயார்.
இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை சந்தித்ததால் பாஜகவுக்கு எதிராக கமல் பேசுகிறாரா?
காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட பிற கட்சிக்களுக்காக கமல் இவ்வாறு பேசவில்லை. திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததால் காங்கிரஸ் கட்சியுடன் இடைவெளி ஏற்பட்டது. எனினும் திமுக மற்றும் அதிமுக, பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்பதில் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுதியாக உள்ளது.
கமலின் பிரச்சாரம் இப்படி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமல் தொடர்ந்து பிரச்சாரப் பயணம் மேற்கொள்வாரா?
இந்த விவகாரத்தால் எங்கள் தலைவரின் சுற்றுப்பயணத்தில் தடை எதுவும் இல்லை. ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ள நிலையில் திட்டமிட்டபடி இன்று மாலை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியிலும், நாளை அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியிலும் நாளை மறுநாள் சூலூர் சட்டமன்ற தொகுதியில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்வார்.