தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடையும் நிலையில், மேலும் சில புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (28/11/2020) காலை 10.00 மணிக்கு காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவ குழுவுடன் இன்று (28/11/2020) மதியம் 02.00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ குழுவினர் அளிக்கும் கருத்துகள் அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுத்து அறிவிப்பை வெளியிடவுள்ளது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.