தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் வளசரவாக்கம் தொகுதியில் உள்ள வாக்குசாவடியில் வாக்கு செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ''வாக்கு பணம் கொடுக்கும் வேட்பாளரை 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை என அறிவித்தால் ஒரு நற்பெயர் வரும் அச்சம் வரும். சாலையில் வருவோரை போவோரை தேர்தல் பறக்கும் படை பிடிக்குதே தவிர, தொகுதியில் எங்கேபோய் நிற்கிறது. எல்லோருக்கும் தெரியும் காசு கொடுக்கிறார்கள். கோவையில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்ட வீடுகளில் 'பெய்ட்' என்று எழுதி வைத்துள்ளார்கள். நாங்கள் பார்க்கிறோம். தேர்தல் ஆணையம் பார்க்கவேண்டும் அல்லவா? இந்த கேட்டுக்கெட்ட பணநாயகம் இருக்கும் வரை ஜனநாயகம் கேலி கூத்துதான். 22 நாட்கள் கழித்து வாக்கு எண்ணுவதற்கு தேர்தலை ஏப்ரல் 30 ஆம் தேதி வைத்து மே ஒன்றாம் தேதி எண்ணலாமே? ஏன் பெட்டியை ஒரு இடத்தில் 22 நாட்கள் அடைத்து வைக்கிறீங்க. இதுவே சந்தேகத்தை எழுப்புகிறதே. இது முடிஞ்ச உடனே ஊரடங்குனு ஒன்னு போடுவீங்க. நாங்க அடங்கி இருப்போம்.நீங்க அடங்கி இருப்பீர்களா?'' என்றார்.