சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் காணொளி வாயிலாகச் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "கரோனாவால் இரண்டு மாதங்களாக தமிழகம் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகிறது. முதல்கட்ட ஊரடங்கில் கரோனா பாதிப்பு குறைந்த அளவில் இருந்தது. கரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாகக் கூற வேண்டும். நாட்டிலேயே கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் போது தமிழகத்தில் மட்டும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள நகரங்களிலேயே சென்னையில்தான் சராசரியாக தினமும் 1,597 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் அலட்சியத்தால் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பாதிப்பு, நோயால் இறந்தவர்கள் எண்ணிக்கையை மறைப்பது ஆபத்தானவை. கோயம்பேடு மார்க்கெட் விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததால் கரோனா பாதிப்பு அதிகரிப்பு. கரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாகக் கூற வேண்டும். முதலமைச்சரின் பொறுப்பின்மையால் தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளது. கரோனா தொற்று அதிகரித்த நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறந்தது வேதனையானது.
தமிழகத்தில் கரோனா சமூகப் பரவலாக மாறியதற்கு ஆதாரம் இருக்கிறது. கரோனாவால் இறந்தவர்களில் 236 பேரின் மரணம் மறைக்கப்பட்டுள்ளது. உண்மையை மறைக்க மாற்றி மாற்றி கரோனா பாதிப்பு விவர அறிக்கையை வெளியிடுகிறாரகள். நோய் யார் மூலம் தொற்றியது என்ற விவரங்கள் ஜூன் 1- ஆம் தேதி முதல் வெளியிடப்படவில்லை. கரோனாவைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் முதல்வர் இருக்கிறார். கரோனாவின் தீவிரத்தை மக்களிடம் கூறாமல் நோய்ப் பாதிப்புப் போய் விடும் எனத் தவறான தகவலைக் கூறினார்.
தமிழகத்தில் கரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றால் ஏன் பாதிப்பு அதிகரித்து வருகிறது? கரோனா ஊரடங்கின்போது குழுவுக்கு மேல் குழு என அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகள் எங்கே? எதிர்க்கட்சிகளுடன் ஆக்கப்பூர்வமாக ஆலோசிக்க அரசு ஏன் தயங்குகிறது? சென்னையில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டத்தை எப்போது வெளியிடுவீர்கள்? பொருளாதார மீட்பு, வேலையில்லா திண்டாட்டத்தைச் சரிசெய்ய எப்போது அரசு ஆர்வம் காட்டும்? உள்ளிட்ட ஐந்து கேள்விகளுக்கும் முதல்வர் பழனிசாமி பதிலளிக்க வேண்டும்." இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.