தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும் நாவலாசிரியருமான பேராசிரியர் ராஜ் கௌதமன் இன்று (நவம்பர் 13) காலாமானர். 74 வயதான அவர் கடந்த சில காலமாக உடல்நலம் குன்றி இருந்தார்.
ராஜ் கௌதமன் 25.08.1950 அன்று பிறந்தவர். தமிழ் சங்க இலக்கியங்களின் ஊடாக தமிழ் பண்பாட்டு வளர்ச்சியை ஆய்வு செய்தவர். மார்க்ஸிய, பின்நவீனத்துவ, தலித்திய பார்வை கொண்டவர். பேராசிரியர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர். இலக்கியமும், அழகியலும் எவ்வாறு அதிகார வர்க்கத்தின் கருத்தியலை நிறுவிக்கொள்ள உதவின என்பதை தன் ஆய்வுகள் மூலம் விளக்கியவர்.
ராஜ் கௌதமன் புதுவை மாநிலத்தில் காரைக்கால் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்பேராசிரியராக பணியாற்றினார். புதுசேரி தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றினார். காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் தலைமைப்பேராசிரியராகப் பணியாற்றி 2011-ல் ஓய்வு பெற்றார்.
ராஜ் கௌதமன் தன்வரலாற்றுத் தன்மைகொண்ட மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ். அவை எள்ளலுடன் பேச்சுநடையில் சென்ற அரைநூற்றாண்டில் தமிழ்ச்சமூகவியல் மாற்றங்களை வெளிப்படுத்தும் படைப்புக்கள். பாவாடை அவதாரம் என்னும் சிறுகதைத் தொகுதியையும் எழுதியுள்ளார்.மேலும், பல்வேறு பண்பாட்டு ஆய்வு நூல்களையும், இலக்கிய ஆய்வு நூல்களையும், மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதி உள்ளார்.