நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் மிதமான மழை பெய்த போதிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்ககை கடுமையாக முடங்கியுள்ளது. வீடு, உடமைகள் மற்றும் விவசாய நிலங்களை இழந்தும், வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாலும் குந்தா, மஞ்சூர், கூடலூர் உள்ளிட்ட பகுதியிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு கருதி தற்காலிக முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு உணவு, போர்வைகள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழக்கபட்டு வருகிறது. இருப்பினும் தங்களுக்கு நிரந்தர வீடு மற்றும் வேலை வாய்ப்புக்களை அரசு ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே உதகை எமரால்டு, அவலாஞ்சி பகுதிகளில் சிக்கியிருந்த 45 பேரை ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்படையினர் மீட்டனர். அதில் 4 பேருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஹெலிகாப்டர் உதவியுடன் அவர்கள் கோவை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச்செல்லப்பட்டனர்.
கொட்டும் மழையில் உயிரை பொருட்படுத்தாமல் நடு வனப்பகுதியில் ஹெலிகாப்டரை தரை இறக்கி மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 45செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த நான்கு நாட்களில் 450செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் பெய்த மழை அளவில், இதுவே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.