
தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரச்சாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் தேதிகள் தாமதமாக அறிவிக்கப்படும் என அரசியல் கட்சிகள் நினைத்திருந்த நிலையில், தேர்தல் தேதி முன்னதாகவே அறிவிக்கப்பட்டதால் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, பிரச்சாரம், வேட்பாளர் பட்டியல், வேட்புமனுத்தாக்கல் போன்ற விஷயங்களில் அரசியல் கட்சிகள் மும்மரமாக இயங்கி வருகின்றன.
அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவுடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டுள்ளது. நேற்று (28.02.2021) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-ன் மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிந்த்ரநாத் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அப்பொழுது பாஜக தரப்பில் 35 க்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், 22 தொகுதிகளையும் கன்னியாகுமரி நாடாளுன்றத் தொகுதியையும் பாஜகவிற்கு ஒதுக்க அதிமுக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் மத்திய அரசு செய்த சாதனைகளை மக்களிடம் தெரிவித்து வாக்கு கேட்போம். திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வதைப்போல் பாஜகவில் ரவுடிகள் இல்லை. இன்னும் 2 நாட்களில் அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகும். இழுபறி இல்லை” என்றார்.