Skip to main content

ஆர்டிஐ- க்கான இணைய தளத்தை உருவாக்காத தமிழக அரசு!

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

ஆர்டிஐ என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RIGHT TO INFORMATION ACT -2005) ஆகும். மத்திய அரசின் கீழ் உள்ள துறைகளிடம் கேள்வி எழுப்ப விரும்பினால் மத்திய அரசு அதற்கான இணைய தளத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் தமிழக அரசிடம் துறை சார்ந்த மற்றும் செலவிடப்படும் நிதி குறித்த தகவல்களை பெற விரும்பும் பட்சத்தில் தமிழக மக்கள் கடிதம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு (RTI APPLICATION) செய்யும் மக்களுக்கு குறிப்பிட்ட நாளில் சம்மந்தப்பட்ட அலுவலகம் பதிலளிக்காததும், மனுதாரர் தனது மனுவின் நிலையை குறித்து அறிந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு என்று தனி இணைய தளம் உருவாக்காதது தான். குறிப்பாக தகவல் அறிவும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வேண்டி ஒருவர் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆர்டிஐ அலுவலரிடம்  விண்ணப்பித்தால் , மனுதாரருக்கு பதில் மனு சென்றடைய சுமார் 60 நாட்கள் ஆகிறது.

 

RTI

 

 

இதனால் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பொது மக்கள் உட்பட அனைவரும் தங்களுக்கு வேண்டிய தகவல்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் அனைத்து அரசு துறைகளும் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாறி வரும் நிலையில் தமிழக அரசு மட்டும் ஏன் ஆர்டிஐ-க்கென்று இணையதளம் உருவாக்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதனைத்  தொடர்ந்து ஆன்லைன் மூலம் ஆர்டிஐக்கு விண்ணப்பிக்கும் முறையை  தமிழக அரசு கொண்டு வரும் பட்சத்தில் ஆர்டிஐ-ன் சட்டத்தின் கீழ் எளிதாக மக்கள் விண்ணப்பிக்க முடியும். மேலும் சம்மந்தப்பட்ட மனு தாரர்களுக்கு குறைந்த பட்சம் 10 நாட்களில் அரசு எளிதாக பதில் கடிதம் அளிக்க முடியும். அதே போல் ஆர்டிஐ சட்டத்திற்கு மேலும் வலுவூட்ட முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே தமிழக அரசு ஆர்டிஐ-க்கென்று தனி இணையதளம் உருவாக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்