ஆத்தூர் அருகே குறைந்த விலைக்கு தங்க நகைகள் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் வசூலித்து 4.12 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு பெண்கள் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் நொச்சிக்குளத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (45). இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில், “சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரகனூரில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் பெண் ஆசிரியர் ஷியாமளா என்பவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் தனது தங்கை ஜீவா, கணவர் சிவக்குமார் ஆகியோருடன் சேர்ந்து குறைந்த விலைக்கு தங்க நகை வாங்கித் தருவதாகக் கூறினார். அதை நம்பிய நான் அவர்களிடம் 25 லட்ச ரூபாய் கொடுத்தேன். என்னைப் போல் பலர் அவர்களிடம் லட்சக்கணக்கில் கொடுத்தனர். ஆனால், யாருக்கும் அவர்கள் தங்க நகைகளை வாங்கிக் கொடுக்கவில்லை. பின்னர் தான் அவர்கள் திட்டமிட்டே எங்களை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இது குறித்து குற்றப்பிரிவு டிஎஸ்பி இளமுருகன் தலைமையில் காவல்துறையினர் விசாரித்தனர். பள்ளி ஆசிரியர் ஷியாமளா, அவருடைய தாய் சித்ரா, சித்தி விஜயா, தங்கை ஜீவா, கணவர் சிவக்குமார் ஆகிய ஐந்து பேரும் குறைந்த விலைக்கு தங்க நகைகள் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்திருப்பது ஊர்ஜிதமானது. கந்தசாமியைப் போல் மேலும் 23 பேர் அவர்கள் மீது புகார்களைக் கொடுத்துள்ளனர். இதன்மூலம் ஷியாமளா தரப்பினர் கிட்டத்தட்ட 4.12 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, பெண் ஆசிரியர் ஷியாமளா உள்ளிட்ட ஐந்து பேர் மீதும் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் வீரகனூரில் வசித்து வந்த ஷியாமளா, மஞ்சனியில் வசித்து வந்த ஜீவா, சிவக்குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். சித்ரா, விஜயா ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டனர். காவல்துறையினர் அவர்களைத் தேடிவந்தனர். இந்நிலையில், திங்கட்கிழமை (பிப். 20, 2023) அவர்கள் இருவரும் சேலம் 6வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரித்த நீதித்துறை நடுவர், இருவரையும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதையடுத்து சித்ரா, விஜயா ஆகிய இருவரும் சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். விரைவில் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.