தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தமிழக அரசு சார்பில் இரண்டாவது முறையாக 10 மசோதாக்களை சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களைக் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்ட விரோதமானது. எனவே 10 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.