
ஆண்ட்ராய்டு செல்போன் வந்ததிலிருந்தே கலாச்சார சீரழிவு தொடங்கிவிட்டது என்று கூறலாம். செல்போனின் பயன் இந்த நவீன காலத்தில் இன்றியமையாதது என்றாலும், அதை தவறான பாதையில் பயன்படுத்துவதால், நாளுக்கு நாள் குற்ற சம்பவத்தில் இருந்து கலாச்சார சீரழிவு வரை நடக்கின்றது. குறிப்பாக இன்றைய கால இளம் பெண்களில் இருந்து குடும்பப் பெண்கள் வரை வாழ்க்கையை தொலைக்கின்றனர். அந்த வரிசையில் தாம்பரம் பகுதியை சேர்ந்த 23 வயதாகும் இளம் இன்ஸ்டாகிராமில் பழகிய காதலனால் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாகி, காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் காவல்துறைக்கு சென்று புகார் அளித்தும் அந்த பெண்ணை அலையவிட்டு தற்போது வரை வழக்குப் பதியாமல் காவல்துறையினர் அலைய விட்டதால் அந்தப் பெண்ணின் கர்ப்பம் கலைந்து தற்போது சிகிச்சை பெற வழக்கு பதிவு செய்தால் தான் முடியும் என்று மருத்துவமனை கைவிரிக்க உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த இளம்பெண் நீதி வேண்டி நக்கீரனின் கதவைத் தட்டினார்.
நம்மிடம் பேசிய தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதாகும் அந்த இளம் பெண், தனக்கு நடக்கும் கொடூரத்தை பற்றி நம்மிடம் கண்ணீர் மல்க விவரித்தார். 'என் பெயர் சந்தியா (பெயர்மாற்றப்பட்டுள்ளது) என் அம்மா கடந்த 2018 முடக்கு வாதத்தால் இறந்து விட்டார். அப்பா டிபி நோயால் கடந்த 2019 ஆம் ஆண்டு குரோம்பேட்டை காசநோய் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனக்கு உடன் பிறந்த ஒரு தங்கை படித்து வருகிறார். இருவரும் இறந்து விட்டதால் நாங்கள் இருவரும் என் தாய் வழி பாட்டியுடன் தண்டையார்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். தானும் என் தங்கையும் கல்லூரிக்கு சென்று படித்து வந்தோம். எனது தாத்தா துறைமுகத்தில் பணி செய்து ஓய்வுபெற்று தற்போது இறந்துவிட்டார். அவரின் ஓய்வூதியம் எங்கள் பாட்டிக்கு வந்தது, அதை வைத்து எங்கள் குடும்ப செலவையும், எங்கள் இருவரின் படிப்பு செலவையும் கவனித்து வந்தார். நான் அழகு கலை தொடர்பான படிப்பை கற்று வந்தேன். பார்ட் டைமாக வேலைக்கும் சென்று வந்தேன். இந்நிலையில் கடந்த 2021 ஆம் வருடம் தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த, 25 வயதான தினேஷ் என்பவன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு சாட்டிங் செய்து வந்தான். ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் நெருக்கமாக இன்ஸ்டாகிராமில் பேசி வந்தோம். நேரில் பார்க்க வேண்டும் என்று இருவரும் தண்டையார்பேட்டை பகுதியில் பார்க்கில் நேராக இருவரும் சந்தித்தோம். தொடர்ந்து ஒரு வாரம் பேசி வந்த நிலையில், தினேஷ் என்னை காதலிப்பதாகவும், என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், என்னிடம் ஆசை வார்த்தை கூறி காதல் வலை வீசினான். நான் என்னைப் பற்றியும், என் குடும்ப சூழல் பற்றியும், அவனுக்கு எடுத்துச் சொன்ன போதும், அவன் என்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினான். அதை நம்பி நானும் காதல் வலையில் விழுந்தேன்.

அந்த நேரத்திலே தினேஷ் அவன் வீட்டுக்கு என்னை அழைத்து சென்று திருமணம் செய்து கொள்ள தானே போகிறேன் என்று என்னுடன் உல்லாசமாக இருந்தான். பிறகு பல இடங்களில் இருவரும் ஜோடியாக சுற்றி திரிந்தோம். அந்த நேரத்தில் பலமுறை அவன் ஆசைக்கு என்னை பயன்படுத்திக் கொண்டான். அந்த சமயத்தில் ஒருநாள் என் மாமா நாங்கள் இருவரும் சுற்றி திரிவதை பார்த்துவிட்டு, என்னை வீட்டில் வந்து அடித்து கண்டித்தார். அவனுக்கும் போன் செய்து கண்டித்தார். இதனால் இருவரும் பிரிந்து விட்டோம். இருவரும் பேசவில்லை, என் தங்கை படிப்புக்காகவும், எனது காதல் விவகாரம் காரணமாகவும், எனது பாட்டி எங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு, தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினோம்.
ஆனாலும் இன்ஸ்டாகிராமில் அவன் போடும் போஸ்டை நானும் பார்ப்பேன். நான் போடும் போஸ்டை அவனும் பார்ப்பான். இந்நிலையில் 2024 ஜனவரி மாதம் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, அப்போது அதைப்பற்றி நான் இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டிருந்தேன். அதைப் பார்த்த தினேஷ், இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு என் உடல் நலத்தை பற்றி விசாரித்தான். நானும் பொதுவாக பேசினேன். இந்த நிலையில், அவன் ஒரு பெண்ணை காதலித்து அந்த பெண் அவனை விட்டு சென்றதாக என்னிடம் கூறினான். மேலும் என்னையே காதலிப்பதாகவும், என் வீட்டில் பேசி, என்னை திருமணம் செய்வதாகவும், மீண்டும் எனக்கு ஆசை வார்த்தை கூறி, பேசி பழைய காதலை தொடர்வோம் என்று தொடர்ந்து மெசேஜ் செய்து கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் நானும் ஒப்புக் கொண்டேன். இதை கொண்டாடும் விதமாக கேரளாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த ஆறு நண்பர்களுடன் சுற்றுலா சென்றோம். கேரளாவில் கொச்சினில், ரூம் எடுத்து தங்கினோம், ஒரு வாரம் பல இடங்கள் சுற்றித் திரிந்து, அவனும் நானும் தனிமையில் பலமுறை உல்லாசமாக இருந்தோம்.
என்னை அவனோடு இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டான். சென்னை திரும்பியவுடன் என் மாமா மற்றும் என் பாட்டிக்கு போன் செய்து என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினான். இதனால் மேலும் அவனை நம்பி, நானும் அவனும் ஈசிஆர் ,கோவளம், செம்மஞ்சேரி, தண்டையார்பேட்டையில் அவன் வீட்டில் என, பல இடங்களில் தனிமையில் பல இரவுகள் அவனுடன் கணவன் மனைவிபோல இருந்தோம். கடைசியாக 2025 ஜனவரி 11ஆம் தேதி 4 நாள் பாண்டிச்சேரிக்கு சென்றோம், அப்போதும் இருவரும் தனிமையில் கணவன் மனைவி போல இருந்தோம். சென்னை திரும்பியதும், சில நாட்கள் சென்ற நிலையில், பிப்ரவரி மாதம் எனக்கு மாதவிடாயினால் தள்ளி சென்றது, எனக்கு உடல் ரீதியாக ஒரு சில பிரச்சனை இருந்ததால் தள்ளிப் போகிறது என்று இருந்த நிலையில், ஒரு வாரம் கழித்து தாம்பரம் பகுதியில் என் வீட்டின் அருகே உள்ள ராமசாமி மருத்துவமனையில் கர்ப்பமாக உள்ளேனா என்று சோதனை செய்த போது, பாசிட்டிவாக ரிசல்ட் வந்தது.
நான் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி ஆனேன். தினேஷை பலமுறை தொடர்பு கொண்டு போனை எடுக்கவில்லை. எனது தங்கை செல்லில் இருந்து வாட்ஸ் அப் மூலம் கண் கர்ப்பமாக இருக்கும் ரிசல்ட் போட்டோ எடுத்து அவனுக்கு அனுப்பினேன். அதைப் பார்த்தவுடன் என்னிடம் பேசிய தினேஷ்" அது எப்படி கர்ப்பம் ஆகும், நான் அதற்கு பொறுப்பு இல்லை, என்று கெட்ட வார்த்தையில் திட்டினான். நான் அதிர்ச்சி ஆனேன். மறுநாள் தலைமைச் செயலகம் எதிரியே உள்ள பார்க்கில், இருவரும் சந்தித்தோம். அப்போது அவன் மிக மோசமான கெட்ட வார்த்தையில் தீட்டினான். மேலும் அவன் "எங்கள் வீட்டில் எல்லாம், உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்'' என்று கூறியபடி, என்னை நடுரோட்டில் விட்டுவிட்டு சென்று விட்டான். மறுநாள் அவன் என்னை அழைத்து காரில் தாம்பரம் வந்து, என்னை அழைத்து சென்றான், ஒரு ஓட்டலில் வண்டியை நிறுத்திவிட்டு, என் பேக்கை வாங்கிக்கொண்டு, என்னிடம் கர்ப்பத்தை உறுதி செய்யும்,( பிரக்னன்சி ரிப்போர்ட் கார்டு கிட்) உள்ளதா என்று சோதனை செய்தான். நான் மேலும் அதிர்ச்சி அடைந்தேன். பிறகு அவன் வாங்கி வைத்திருந்த, கர்ப்பத்தை உறுதி செய்யும், பிரக்னன்சி ரிப்போர்ட் கார்டை, அங்குள்ள கழிவறைக்கு சென்று டெஸ்ட் எடுத்துக்கொண்டு வரச் சொன்னான், அந்த ரிப்போர்ட் கார்டில், சிறுநீர் கழித்தால் கர்ப்பமாக இருந்தால் சிவப்பு கோடு தெரியும்/ இல்லை என்றால் வெள்ளை நிறமாகவே இருக்கும், அதை சோதனை செய்தபோது, அதிலும் நான் கர்ப்பமாக இருப்பதை அந்த கார்டு உறுதி செய்தது. மீண்டும் என்னை தவறான வார்த்தையில் திட்டி விட்டு, எங்கள் வீட்டில் எல்லாம் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உடனே நான் சொல்வதைக் கேள் இதை தனியார் மருத்துவமனையில் கலைத்து விடலாம் என்று கூறினான். இந்த பதிலை நான் அவனிடம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. என்னை தாம்பரத்தில் எனது வீடு அருகே விட்டு விட்டு சென்று விட்டான். அப்போதுதான் எனக்கு அவனின் சுயரூபம் தெரிய வந்தது. அவன் காம இச்சைக்கு என்னை பயன்படுத்தியதும், திருமணம் செய்து கொள்வதாக என்னை அவன் படுக்கையில் அவன் விருப்பத்திற்கு என்னை அனுபவித்தான். ஆனால் கர்ப்பம் ஆனது தெரிந்தவுடன் பணக்காரன் என்பதும் அவன் இச்சைக்கு என்னை பயன்படுத்தியதும் உண்மை புரிந்தது.
அன்று இரவு வீட்டுக்கு சென்றதும் தினேஷுக்கு தொடர்ச்சியாக போன் செய்தேன், போனை எடுத்துப் பேசிய தினேஷின் அம்மா யாருமா நீ சும்மா, சும்மா போன் பண்ணிட்டு இருக்க' என்று என்னை தெரியாத படி கேட்டார்.? நான் அதற்கு"உன் பையனையே கேள்நான் யார் என்று, உன் பையனை காதலித்து, அவனால் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன்.!' என்று கூறினேன். அதற்கு தினேஷின் அம்மா" நீ நடுத்தெருவுல இருக்கிற, உனக்கு ஆத்தா, அப்பா கிடையாது, எங்க ஸ்டேட்டஸ்க்கு என் வீட்டுக்குள்ள வரதுக்கு உனக்கு தகுதி இல்லை, ஒழுங்கா கர்ப்பத்தை கலைச்சுடு. நீ வா, நானே கூட்டிட்டு போறேன், செலவையும் பார்த்துகிறேன், உனக்கு என்னன்னு சொல்லு, பணமா செட்டில்மெண்ட் கொடுக்கிறேன், என் மகனை விட்டு என்று கூறினார். அதற்கு நான் "உன் பொண்ணா இருந்தா, இப்படி பேசுவீங்களா.? இல்ல இந்த மாதிரி கேப்பீங்களா.? என்றேன். உடனே தினேஷ் அம்மா "என் வீட்டு வாசப்படி மேல கால வச்சா கூட உன்னை குடும்பத்தோட க்ளோஸ் பண்ணிடுவேன் என்று மிரட்டினார். நானும் என் வாழ்க்கையை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் என் உறவினர் அண்ணா மூலம் தினேஷின் அம்மாவிடம் பேசினேன். அதற்கு அவர்கள் குழந்தையை கலைச்சிட சொல்லு எவ்வளவு பணம் வேணும்னாலும் நான் செட்டில் பண்றோம் என சொல்ல முடியாத கெட்ட வார்த்தை எல்லாம் பேசினாங்க. ஒரு கட்டத்தில் போன் கட் பண்ணிட்டாங்க.
இது ஒரு பக்கம் இருக்க, எங்க பாட்டிக்கு இந்த விஷயம் தெரிஞ்சதும்," ஊரே சிரிக்கும்படி அசிங்கம்படுத்திட்டியே என்று சொல்லி, என்ன வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்கள். வேற வழி தெரியாம எங்க போறதுன்னு தெரியாம இருந்த நேரத்துல, என் கூட படிச்ச தோழி ஒருத்தி, இந்த விஷயம் எல்லாம் சொன்னதும் ஆவடியில் அவ வீட்ல தற்காலிகமாக தங்கிக்க சொன்னா, நான் இப்போ அங்க தான் இருக்கேன்.
எனக்கு தெரிஞ்ச அண்ணா ஒருத்தர் மூலமா, கேசவன், வில்வநாதன் என்ற இரண்டு அட்வகேட், எனக்கு தைரியம் சொல்லி, தாம்பரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, புகார் மனு எழுதிட்டு போனோம். அங்கிருந்த பெண் போலீஸ்" இது எங்கள் லிமிட் இல்ல, நீங்க கூடுவாஞ்சேரி போங்கன்னு அனுப்பிச்சிட்டாங்க, கூடுவாஞ்சேரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன," நாங்க கிளம்பாக்கம் ரேப் கேஸ் விஷயமா பிஸியா இருக்கோம், அந்தப் பையன் ஏரியால இருக்கிற மகளிர் போலீசுக்கு போமா... அப்படின்னு அலட்சியமா அனுப்பிட்டாங்க. நான் இங்கேயும், அங்கேயும் அலையுற நேரத்துல, என்னோட வயிறு வலி அதிகம் ஆச்சு, கூடுவாஞ்சேரி மகளிர் ஸ்டேஷன்ல இருக்குற நேரத்துல, என்னோட பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழி ஆரம்பிச்சுச்சு, உடனே பக்கத்துல இருக்கிற எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போன, அங்க பரிசோதனை செஞ்ச டாக்டர் என்னோட கர்ப்பம் களைய ஆரம்பிச்சுருச்சு, இது போலீஸ் கேஸ், நீங்க வேற ஆஸ்பிடல் போங்கன்னு அனுப்பிட்டாங்க. தாங்க முடியாத வயிற்று வலி ஒரு பக்கம், கர்ப்பம் களைய ஆரம்பித்து ரத்தம் சொட்ட சொட்ட என்னோட ஆடை எல்லாம் ரத்தக்கரையா இருந்தது. ஆவடியில் இருக்கிற என் தோழி விட்டு போயிட்டு, வலி தாங்க முடியாமல், படுத்துட்டேன். அன்னைக்கு நைட்டு மொத்தமா வெளியே வந்துடுச்சு, அப்பதான் நான் நினைச்சேன், ஏன்டா ஒரு பொண்ணா பொறந்தோம்.? அவனோட சுகத்துக்கு, என்னோட மானத்தையும் இழந்து, உயிர் போற அளவு வலிய தாங்க முடியல, போலீஸ்காரங்க வழக்கு பதிவும் செய்யாமல், மனசாட்சியே இல்லாம அலைய விட்டதால், கருவும் கலைஞ்சு, சிகிச்சை கூட எடுக்க முடியாமல், உயிர்க்கு ஆபத்தான நிலையில இருக்கோம் தெரியுது, என்று கண்ணீர் மல்க காதோரி அழுதார்.

இதை கேட்கும் போது நமது கண்களிலும் கண்ணீர் வந்துவிட்டது. எனக்கு தாய் தந்தை யாரும் இல்லாததால, பணம் படைத்த தினேஷ் தண்டனை கிடைக்காதா.? மகளிர் போலீசில் இருக்கிறவங்களும் ஒரு பெண் தானே.? என்னோட வாழ்க்கையும், வலியும் அவங்களுக்கு புரியலையா.? தற்கொலை செய்து கொள்ளலாம் யோசித்து இருந்த நேரத்துல, என்னோட தோழி ரூமுக்குள்ள வந்தா, அழுதுட்டு இருந்த என்னை பார்த்து, என்ன ஆச்சுன்னு கேட்டா.? நான் நடந்ததை எல்லாம் சொன்னேன், எனக்கு ரத்த வழிந்து கொண்டிருப்பதை, பார்த்து என் தோழி, அவளுக்கு வேண்டப்பட்டவர்கள் ரெண்டு பேர் வர வச்சு, பக்கத்துல இருக்குற ஆவடி தீபம் மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனா, ஆனா அந்த மருத்துவமனையில ,இது போலீஸ் கேஸ், கல்யாணம் ஆகாத பொண்ணுக்கு நாங்க ட்ரீட்மென்ட் பாத்தா, சட்டப்படி குற்றம், எஃப்.ஐ.ஆர் இருந்தா தான், சிகிச்சை பண்ண முடியும் என்று, வலிக்கு மட்டும் மாத்திரையை கொடுத்து, பெட் ரெஸ்ட்ல இருக்க வச்சு, வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.
எனக்கு கருக்கலைப்பு ஆனதனால, என்னோட கர்ப்பப்பையை டிஎன்சி முறையில சுத்தப்படுத்தலைன்னா, அது இன்பெக்சன் ஆகி, கர்ப்பப்பையை இழக்க நேரிடும், இல்ல உயிருக்கு ஆபத்து ஏற்படும், கர்ப்பப்பை எடுத்துட்டா எதிர்காலத்துல எனக்கு குழந்தையே பிறக்காது, அதனால இந்த வலியும் பொருட்படுத்தாமல், எச்-5 மணிக்கூண்டு காவல் நிலையத்திற்கு போன, வழக்கம் போல... அங்கிருந்த போலீஸ், "இது எங்கள் லிமிட் இல்ல, எச்-8 தண்டையார்பேட்டை மகளிர் போலீஸ் போங்கன்னு அனுப்பிட்டாங்க. வலியை பொறுத்துட்டு தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு போன, அங்க சுடிதார் போட்டு இருந்த போலீஸ் மேடம்," நீ எங்கெங்கே போயிட்டு வந்து, இங்க வந்து இருக்க," நீ சிட்டி போலீஸ் கமிஷன் ஆபீஸ்ல புகார் குடுமான்னு அனுப்பிட்டாங்க. வெப்பேரி போலீஸ் கமிஷனர் ஆபீஸ் போய், புகார் மனு கொடுத்தேன், புகாரை வாங்கிய போலீஸ் ஆபீசர் ஒருத்தர், ரெண்டு நாள் கழிச்சு தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு போக சொன்னாங்க. இங்கதான் இந்த போலீஸ்காரர் தான் என் கண்ணுக்கு அப்பா அம்மா மாதிரியும் கடவுள் மாதிரியும் தெரிஞ்சாறு எனக்கு நீதி கிடைக்கும் என்ற எண்ணமே வந்துச்சு, ரெண்டு நாள் கழிச்சு தண்டையார்பேட்டை மகளிர் போலீஸ்க்கு போன "தினேஷ் வரவச்சிருந்தாங்க, ரெண்டு பேரையும் பேச சொன்னாங்க, அவன் கல்யாணம் பண்ணிக்க ரெண்டு வருஷம் டைம் கேட்டான், நானு ஓகே, ஆனா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கோ, அப்புறமா நீ சொல்ற மாதிரி பண்ணிக்கலாம் சொன்னேன், அப்புறம் அவனும் ஒரு வருஷத்துக்கு அப்புறம் பண்ணிக்கலாம் ரிஜிஸ்டர் மேரேஜ் வேணாம்னு சொன்னான். நான் ஒத்துக்கல, இவன் என்னை ஏமாத்துறான்னு தெரிஞ்சுச்சு, மனசாட்சியே இல்லாத இவன் கூட இனி வாழ முடியாதுன்னு தெரியும், ஆனா எனக்கு ஃபர்ஸ்ட் சிகிச்சை எடுக்கணும், என்னை ஏமாத்தின இவனுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்கணும்னு, என் மனசுல தோனி கிட்டே இருந்துச்சு.

வேற எந்த பொண்ணையும் இவன் ஏமாற்ற கூடாது. புகார் மீது நடவடிக்கை எடுக்க சொன்னேன். அவன் கூட வந்த அட்வகேட் ,என்ன ரொம்ப அசிங்கமா பேசினாங்க, அதையும் அந்த போலீஸ் ஸ்டேஷன்ல போலீஸ்காரங்க பார்த்துட்டு சும்மா தான் இருந்தாங்க, உங்களோட பொண்ணு, தங்கச்சியோ இருந்தா இந்த மாதிரி பேசுவீங்களா நான் கேட்டேன். அவங்க சிரிச்சிட்டு நீ புகார் கொடுத்தாலும், அவனை ரெண்டு நாள் நான் ஜாமீன் எடுத்துட்டு வந்துடுவேன்னு, திமிரா பேசினங்க. எனக்கு யாரும் இல்லைன்னு, அவங்க இஷ்டத்துக்கு பேசுனாங்க, கடவுள்னு ஒருத்தர் இருக்காரு, இவங்களுக்கும் சேர்த்து தண்டனை கிடைக்கும் என்ற நான் மனசுல நினைச்சுட்டு பேசவே இல்ல. இத பாத்துட்டு இருந்த அந்த போலீசம்மா, சனி, ஞாயிறு இன்ஸ்பெக்டர் லீவு, திங்கட்கிழமை உங்க சொந்தகாரங்களை யாராவது கூட்டிட்டு ஸ்டேஷனுக்கு வா சொல்லி அனுப்பிட்டாங்க. வழியோடு நானும் என் தோழி வீட்டுக்கு போனேன். போன திங்கட்கிழமை என்னோட தாய் மாமாவை கூட்டிட்டு காலையில பத்து மணிக்கு போலீஸ் ஸ்டேஷன் போன, அன்னைக்கு மாலை 6:00 மணிக்கு தினேஷோட அப்பாவும் அந்த அட்வகேட் மட்டும் வந்தாங்க தினேஷ் வரல, மஞ்சுளா வரலட்சுமி என்ற இன்ஸ்பெக்டர், என்னதான் தப்பா பேசினாங்க, நீயும் தானே கூட சேர்ந்து படுத்த தப்பா பேசினாங்க, ஆனா அவங்க பக்கம் எதையுமே கேட்கல, அதே நேரத்துல தினேஷோட அப்பா என்ன ரொம்ப தப்பு தப்பா ஸ்டேஷன்ல பேசினாங்க. அந்த அட்வகேட்டும் என்ன பெருசா கேஸ் போட போறாங்கன்னு ஏதோ ஒரு செக்சன் பத்தி சொல்லி ரெண்டு நாள்ல ஜாமீனில் எடுத்திடலாம் வாங்க சார் அப்படின்னு கிளம்பிட்டாங்க. போலீஸ்காரங்க மனசாட்சியே இல்லாம இப்படி நடந்துக்கிறாங்க இதுவரைக்கும் எஃப்.ஐ.ஆர் போடல ,.! என் கூட வந்த அட்வகேட் அண்ணா என்கிட்ட காசை வாங்கல, ஆனா அவங்களும் இத்தனை நாளா போராடினாங்க.
எனக்கு போலீஸ் தரப்பில் நீதி கிடைக்காதுன்னு தெரிஞ்சு போச்சு, எனக்கு சிகிச்சையும் செய்யலன்னா என்னுடைய உயிருக்கும் ஆபத்து தெரிஞ்சு போச்சு, வேற வழி இல்ல சாகறதுக்குள்ள இந்த விஷயம், மக்களுக்கும், அரசுக்கும் ,கமிஷனர் ஆபீஸ்ல இருந்த அந்த நேர்மையான உயர் போலீஸ் ஆபீஸ் இருக்கும் தெரியணும். அதுக்காக தான், நான் இறந்த பின்ன, என்னை யாரும் தப்பா பேசாம எனக்கு நீதி கிடைக்கும், என்று கடைசியாக இங்க வந்து இருக்கேன்னு, கண்ணீர் விட்டு கதறி அழுது அவரின் கன்னங்களும், கண்ணும் ரத்த நிற நிறத்தில் சிவந்தது, தண்ணீர் கொடுத்து, சமாதானப்படுத்தி, கண்டிப்பாக உங்களுக்கு நீதி கிடைக்கும் என்றும் , உடனடியாக நக்கீரன் களத்தில் உங்களுக்கு துணையாக நிற்கும் என்றும், தைரியம் கூறி அந்த இளம் பெண்ணை அனுப்பி வைத்தோம்.
இந்த சம்பவம் தொடர்பாக தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மஞ்சு வரலட்சுமி-யை தொடர்பு கொண்டோம். அவர் போனை எடுக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அந்த வழக்கறிஞர் மற்றும் இந்த பெண்ணை அலையவிட்டு, இதுவரை வழக்கு பதிவு செய்யாத போலீசார் மீது சாட்டையை சுழற்றுவாரா..?