Skip to main content

“தமிழ்நாட்டு மக்கள் விவரமானவர்கள்” - விஜய் குறித்த கேள்விக்கு திருமாவளவன் பதில்

Published on 26/02/2025 | Edited on 26/02/2025

 

 Thirumavalavan responds to a question about Vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மேளதாளங்கள் முழங்க, உற்சாக வரவேற்புடன் விஜய் விழா நடக்கும் அரங்கத்திற்குள் நுழைந்தார். அவருடன் சிறப்பு விருந்தினராக ஜன் சுராஜ் கட்சியின் தலைவரான பிரசாந்த் கிஷோர் விழாவில் கலந்துகொண்டார். மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இவ்விழாவில், “இந்த அரசியல் என்றால் வேறு லெவல் தானே?. ஏனென்றால் அரசியலில் மட்டும் தான் வித்தியாசமான ஒன்றைப் பார்க்க முடியும். யார் யாரை எப்போது எதிர்ப்பார்கள் என்று தெரியாது. யார் யாரை எப்போது ஆதரிப்பார்கள் என்றே தெரியாது. அதனைக் கணிக்கவும் முடியாது. அதனால் தான் முன்னாடியெல்லாம் சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதாவது அரசியலில் நிரந்தர நண்பனும், நிரந்தர நிரந்தர எதிரியும் கிடையாது என்று சொல்வார்கள்” என்று பேசிய விஜய், “1967 மற்றும் 1977 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த அரசியல் மாற்றம் போன்று 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அரசியல் மாற்றம் நடக்கும்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில்  செய்தியாளர் சந்திப்பில் விஜய்யின் அரசியல் குறித்த கேள்விக்கு விசிக தலைவர் திருமாவளவன், “சினிமா புகழை மட்டுமே வைத்து எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட முடியாது. தமிழ்நாட்டு மக்கள் விவரமானவர்கள். தமிழ்நாட்டின் இளம் தலைமுறையினரை எளிதாக ஏமாற்றிவிட முடியாது. உரிய முடிவுகளைத் தேர்தல் உணர்த்தும்” என்று பதிலளித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்