
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மேளதாளங்கள் முழங்க, உற்சாக வரவேற்புடன் விஜய் விழா நடக்கும் அரங்கத்திற்குள் நுழைந்தார். அவருடன் சிறப்பு விருந்தினராக ஜன் சுராஜ் கட்சியின் தலைவரான பிரசாந்த் கிஷோர் விழாவில் கலந்துகொண்டார். மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் 'பிரசாந்த் கிஷோர் உள்ளூரிலேயே விலை போகாதவர்' என திமுக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு மற்றும் அமைப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். அப்போது பேசிய கே.என்.நேரு, ''உள்ளூரிலேயே விலை போகாதவர் பிரசாந்த் கிஷோர். அவர் டெபாசிட் கூட வாங்கவில்லை. ஏற்கனவே திமுகவிற்கு அவர் பணியாற்றினார். நம்முடைய முதல்வரும் சும்மா இல்லை. அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. முதல்வருக்கு அனைத்தும் தெரியும்'' என்றார்.